எல்லா சிக்கல்களுக்கும் தீர்வு நமக்குள்தான் இருக்கிறது: ஜக்கி வாசுதேவ்

நாம் சந்திக்கும் எல்லா சிக்கல்களுக்கும் தீர்வு நமக்குள்தான் இருக்கிறது என்று ஈஷா யோக மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பேசினார்.

நாம் சந்திக்கும் எல்லா சிக்கல்களுக்கும் தீர்வு நமக்குள்தான் இருக்கிறது என்று ஈஷா யோக மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பேசினார்.
கோவை, ஈஷா யோக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிலை முன்பாக மஹா சிவராத்திரி விழா செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் கோலாகலமாகத் தொடங்கியது. இதில்,  தியானம், மகா மந்திர உச்சாடனை,  இசை, நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இரவு முழுவதும் நடைபெற்றன.
இவ் விழாவில் ஈஷா யோக மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ்  பேசியதாவது:
சிவராத்திரி நாளில் முதுகுத் தண்டை நேராக வைத்திருக்கும்போது இயற்கையாகவே  சக்திநிலை மேல்நோக்கி நகர்கிறது. ஆன்மிகச் சாதனையில் இருப்பவர்களுக்கு இந்நாளில் மேற்கொள்ளும் பல சிறப்புப்  பயிற்சிகள் உள்ளன. எவ்வித ஆன்மிகச் சாதனையும் இல்லாதவர்களுக்கு முதுகுத் தண்டை நேராக வைத்திருப்பது மிகுந்த பலனைத் தரக்கூடியது.
இந்த ஆதியோகி திருவுருவம் என்பது புது மதம் உருவாக்குவதற்காக இல்லை. புது வழிபாட்டு முறையை உருவாக்குவதற்காகவும் இல்லை. மனித குலம் காணும் அனைத்து சிக்கல்களையும் தகர்த்தெறிய விஞ்ஞான அணுகுமுறையைக்  கொடுத்ததைப் போற்றுவதற்காகவே ஆதியோகி சிலை நிறுவப்பட்டுள்ளது.
இதை  மதத்திலிருந்து பொறுப்புணர்வு நோக்கி அழைத்துச் செல்லும் இயக்கமாக உருவாக்குகிறோம். ஏனெனில், எல்லா சிக்கல்களுக்கும்  தீர்வு நமக்குள்ளேதான் இருக்கிறது. அனைத்திலும் ஒன்றிக் கலப்பதுதான் யோகா. இந்த இரவில் நான் என்ற தன்மையை முழுமையாகத் தள்ளி வைக்க வேண்டும் என்றார். 
இந்த விழாவில்,  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,  அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, நடிகை தமன்னா உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
 இதில், இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 
ஆதியோகியின் ருத்ராட்சம் பிரசாதம்:  ஈஷா யோக மையத்தில் 2017-ஆம் ஆண்டு மஹா சிவராத்திரியில் 112 அடி ஆதியோகி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது, தன்னார்வத் தொண்டர்களால் கோக்கப்பட்டு 1 லட்சத்து 8 ருத்ராட்சங்கள் கொண்ட மாலை ஆதியோகிக்கு அணிவிக்கப்பட்டது. இந்த மாலையிலுள்ள ருத்ராட்ச மணிகள் அனைத்தும் நிகழாண்டு சிவராத்திரி விழாவுக்கு வந்த பக்தர்களுக்கு ஆதியோகியின் பிரசாதமாக வழங்கப்பட்டது. 
ஆதியோகி பிரதட்சிணம்: ஆதியோகி வளாகத்தை வலம் வரும் ஆதியோகி  பிரதட்சிணம் என்னும் முறை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
 குறிப்பிட்ட முறையில் மேற்கொள்ளப்படும் இந்த பிரதட்சிணம் (வலம் வருதல்) ஆதியோகி வளாகத்தில் தொடங்கும். ஒருவர் ஓராண்டுக்குள் 1, 3, 7, 21 அல்லது 112 ஆகிய எண்ணிக்கைகளில் பிரதட்சிணம் செய்யலாம். நோயிலிருந்து விடுதலை, ஆன்மிகத்தில் மேன்மை, தடைகள் அகலுதல் போன்ற பல்வேறு பலன்களுக்காக வெவ்வேறு முறைகளில் இந்த பிரதட்சிண செயல்முறையை சத்குரு வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
பக்தர்களைக் கவர்ந்த இசை நிகழ்ச்சி: புகழ்பெற்ற பாடகர்கள் சோனு நிகம்,  தலேர் மெஹந்தி, மோஹித் செளஹான், சியன் ரொனால்டோ,
 சந்தோஷ் ஷெட்டி குழுவினர், மணிப்பூர் டிரம்மர்ஸ் குழுவினர் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா இசைக் குழுவினரின் நிகழ்ச்சிகளும் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com