மேட்டுப்பாளையம் அருகே விளைபொருள் ஏல மையம் ஆக்கிரமிப்பு: விவசாயிகள் மறியல்

மேட்டுப்பாளையம் அண்ணாஜிராவ் சாலையை ஒட்டிய ராமப்ப கவுடர் வீதியில் விவசாய விளைபொருள் ஏல மையம் ஆக்கிரமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.   

மேட்டுப்பாளையம் அண்ணாஜிராவ் சாலையை ஒட்டிய ராமப்ப கவுடர் வீதியில் விவசாய விளைபொருள் ஏல மையம் ஆக்கிரமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.   
மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை, சிறுமுகை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வெண்டை, கத்தரி, தட்டை, அவரை, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளையும், கீரைகளையும்  விற்பனை செய்வதற்காக  மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் அண்ணா மார்க்கெட் பகுதியில் 1976-ஆம் ஆண்டு முதல் அண்ணாஜிராவ் சாலையை ஒட்டியுள்ள ராமப்பகவுடர் வீதி வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. 
இங்கு தினமும் காய்கறி, கீரைகளை கொண்டு வரும் விவசாயிகள் அதிகாலை 4 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் விற்பனை செய்துவிட்டுச் செல்வார்கள். ஆரம்பத்தில் விவசாயிகளிடம் காய்கறி, கீரைகளை வாங்கி அதே பகுதியில் சிறிய கடைகளை போட்டு சிறு வியாபாரிகள் விற்பனை செய்துவந்தனர்.
நாளடைவில் அப் பகுதியை முற்றிலும் ஆக்கிரமித்து  அவர்கள் நிரந்தரக் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதனால், தினமும் காய்கறிகளுடன் வரும் விவசாயிகளுக்கு காய்கறிகளை இறக்கி வியாபாரம் செய்ய இடம் போதாமல் இருந்து வந்தது. மேலும், கடைகள் முன்பு காய்கறிகளை இறக்கி எடுக்கவும் தனியார் கடைக் காரர்கள் அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் திங்கள்கிழமை காய்கறி மூட்டையுடன் வந்த ஒரு விவசாயியை
அங்குள்ள கடைக்காரர்கள் கீழே தள்ளி விட்டனராம். இதைத் தொடர்ந்து அங்கு திரண்ட விவசாயிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பு செய்த கடைக்காரர்களிடமிருந்து ஏல மைய இடத்தை மீட்டு தங்களுக்கு வழங்க வலியுறுத்தி அண்ணாஜிராவ் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
சம்பவ இடத்துக்கு வந்த மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் ரங்கராஜன், நகர காவல்துறை ஆய்வாளர் சென்னகேசவன் ஆகியோர்  பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண உறுதி கூறியதைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. 
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் அப்துல் ரசீது தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் ரங்கராஜன், காவல்துறை ஆய்வாளர் சென்னகேசவன் உட்பட விவசாயிகளும், ஆக்கிரமிப்பு கடை உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.  இப் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு கிடைக்காவிட்டால்,  குமரபுரம் பகுதியில் புதிய மார்க்கெட் அமைத்து அங்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு செல்ல  முடிவெடுத்திருப்பதாகவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
அதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு கடைகளை தாங்கள் உடனடியாக அகற்றுவதாக கடைக்காரர்கள் சார்பில் தெரிவிக்கப் பட்டது.  நீண்ட நாள்களாக இருந்துவந்த பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டதால், விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com