கூடுதல் கட்டணம் வசூலித்த அரசுப் பேருந்தின் உரிமம் ரத்து: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

கோவையில் கூடுதல் கட்டணம் வசூலித்த அரசுப் பேருந்தின் உரிமத்தை ரத்து செய்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் கூடுதல் கட்டணம் வசூலித்த அரசுப் பேருந்தின் உரிமத்தை ரத்து செய்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பின் செயலாளராக இருப்பவர் கதிர்மதியோன். இவர் 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வடவள்ளியில் இருந்து கோவை ரயில் நிலையத்துக்கும், ரயில் நிலையத்தில் இருந்து வடவள்ளிக்கும் அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அவரிடம் பேருந்து நடத்துநர் பயணச்சீட்டு தொகையாக ரூ. 8 வசூலித்துள்ளார். அரசு நிர்ணயித்துள்ள ரூ.5 -க்கு பதிலாக ரூ. 8 வாங்கியது குறித்து கேட்டபோது இது விரைவுப் பேருந்து (எக்ஸ்பிரஸ் ) என்று நடத்துநர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கதிர்மதியோன் கோவை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளார். அப்போது இந்த வழித்தடத்தில் சாதாரணக் கட்டணம் வசூலிப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கியிருப்பது தெரியவந்தது. ஆகவே, இதுகுறித்து கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் கதிர்மதியோன் வழக்குத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றத் தலைவர் பாலசந்திரன் தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
அரசுப் பேருந்தில் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் கூடுதலாக வசூலித்த தொகையை அவரிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும். மேலும், 2015- ஆம் ஆண்டு மார்ச் முதல் 2018 பிப்ரவரி 15-ஆம் தேதி வரையில் அந்தப் பேருந்தில் கூடுதலாக பயணிகளிடம் வசூலித்த தொகை குறித்த விவரங்களை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இரு மாதங்களில் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.
மேலும், இழப்பீடாக ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவுத் தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். இதில், இழப்பீட்டுத் தொகை ரூ. 10 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதியில் சேர்க்க வேண்டும். அதே வேளையில், கூடுதல் கட்டணம் வசூலித்த பேருந்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இரண்டு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் மனுதாரருக்கு கூடுதலாக ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும். இந்த உத்தரவு குறித்து தமிழக தலைமைச் செயலர் மற்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com