கோவை அருகே வாயில் புண்ணுடன் சுற்றும் யானை: சிகிச்சை அளிக்க மறுப்பதாகப் புகார்

கோவை, வடவள்ளி அருகே வாயில் புண்ணுடன் சுற்றும் யானைக்கு சிகிச்சை அளிக்க வனத் துறையினர் மறுப்பதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவை, வடவள்ளி அருகே வாயில் புண்ணுடன் சுற்றும் யானைக்கு சிகிச்சை அளிக்க வனத் துறையினர் மறுப்பதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை, வடவள்ளியை அடுத்த ஓணாப்பாளையம், உலியம்பாளையம் கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சுமார் 10 முதல் 12 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று வாயில் புண்ணுடன் ஒரு வாரமாக சுற்றி வருவதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்துள்ளனர்.
இந்த யானை அடிக்கடி கூட்டத்துடன் சேர்ந்தும், சில வேளைகளில் தனியாகவும் வந்து செல்கிறது. இதற்கு தர்பூசணி போன்ற பழங்களை உணவாக பொதுமக்கள் வைத்துள்ளனர். ஆனால், வாயில் உள்ள புண் காரணமாக எந்த உணவையும் அந்த யானை உட்கொள்ளாமல் மிகவும் சோர்வாக இருந்துள்ளது. இதுகுறித்து வனத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், வனத் துறையினர் யானைக்கு மருத்துவ உதவி அளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை வனச் சரக வனத் துறையினர் அந்த யானையை கண்காணிக்கும் பணியில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். யானையைக் கண்காணிப்பதை விட அந்த யானைக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி உயிரைக் காக்க வனத் துறையினர் முன்வர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் சதீஷ் கூறுகையில், வடவள்ளி பகுதியில் வாயில் புண்ணுடன் யானை சுற்றுவதாகத் தகவல் கிடைத்தது. ஆனால், இந்த யானை தமிழகம், கேரளம் என இரு மாநில வனப் பகுதிக்கும் அடிக்கடி சென்று வருகிறது. ஆகவே, இரு மாநில வனத் துறையினரும் கண்காணித்து வருகிறோம்.
அதே வேளையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், வன கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து அந்த யானையைக் கண்காணித்து வருகின்றனர். கூட்டத்துடன் இருக்கும் யானையைப் பிடித்து சிகிச்சை அளிப்பது சற்று சிரமம்.
எனினும் காயமடைந்த யானைக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வனத் துறை சார்பில் அளிக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com