பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பொங்கல் விழாவையொட்டி, சொந்த ஊருக்குச் செல்ல சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை வந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக மக்களுக்குப் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்களின் பிரச்னை தொடர்பாக சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் முழுமையாகப்  பேசியுள்ளோம். மேலும் இப்பிரச்னை தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  ஜனவரி 22-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர்களை ஆஜர்படுத்தி, சிவகாசி பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டுவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 தொடர்ந்து, கோவை விமான நிலையத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றியும், உறியடித்தும் பொங்கல் விழாவைத் தொடக்கிவைத்தார். பின்னர், கார் மூலமாக சேலம் சென்றார்.  
இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், மாநகரக் காவல் ஆணையர் பெரியய்யா, சட்டப் பேரவை உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், வி.சி.ஆறுக்குட்டி, விமான நிலைய இயக்குநர் மகாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com