பொள்ளாச்சி-கோவை நான்கு வழிச்சாலைப் பணிகள் ஆகஸ்டில் முடிவடையும்: மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன் தகவல்

பொள்ளாச்சி-கோவை நான்கு வழிச்சாலைப் பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் முடிவடையும் என பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.   

பொள்ளாச்சி-கோவை நான்கு வழிச்சாலைப் பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் முடிவடையும் என பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.   
கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை, குறுகிய இரண்டு வழிச்சாலையாக இருந்ததால், நெரிசல், விபத்துகள் அதிக அளவில் ஏற்பட்டது. இதையடுத்து, போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் விதமாக, நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அரசிடம் பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். 
மத்திய அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலமாக கடந்த ஆண்டு அக்டோபரில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. தனியார் நிறுவனத்திடம்  ஒப்பந்தம் அளிக்கப்பட்டு, விரிவாக்கப் பணிகள் தொடங்கின. 
இதனால், கோவை - பொள்ளாச்சி இடையிலான சாலைப் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது.  இருசக்கர வாகனம், கார்களில் செல்வோர் கிராம வழித்தடங்களை மாற்றுப் பாதையாகப் பயன்படுத்தினாலும்,  பேருந்து, கனரக வாகனப் போக்குவரத்து இதே சாலையில்தான் நடைபெற்று வருகிறது. 
பொள்ளாச்சியில் இருந்து, கோவைக்கு தினமும் சென்று வரும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், அலுவலகப் பணியாளர்களுக்கு வேறு போக்குவரத்து வழியில்லாததால் பேருந்தை மட்டுமே நம்பியுள்ளனர். இதனால், ஒப்பந்தக் காலம் முடிவதற்குள் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 
இந்நிலையில், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன் ஆச்சிபட்டி முதல் கற்பகம் கல்லூரி வரை சாலைப் பணியை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். பணிகளை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், "கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை 60 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் மாதம் பணிகள் நிறைவடைந்து சாலை முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வரும். இந்த வழித்தடத்தில் சுங்கச் சாவடி வர வாய்ப்பில்லை. சுங்கச் சாவடி அமைக்கப்பட்டால் மக்களுடன் இணைந்து போராடுவேன்' என்றார்.
இந்த ஆய்வின்போது, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் எம்.கே.முத்துகருப்பண்ணசாமி, நகர்மன்ற முன்னாள் தலைவரும், பொள்ளாச்சி அதிமுக செயலாளருமான கிருஷ்ணகுமார், சார்-ஆட்சியர் காயத்ரி, டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியச்செயலாளர் தம்பு, வட்டாட்சியர் செல்வபாண்டி, தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட அலுவலர்கள், கிணத்துக்கடவு அதிமுக நிர்வாகியும், கிட்ஸ் பார்க் பள்ளித் தாளாளருமான டி.எல்.சிங், கிணத்துக்கடவு செயலாளர் மூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com