மேட்டுப்பாளையத்தில்விவசாயிகள் நுண்ணீர்ப் பாசன திட்ட விழிப்புணர்வு முகாம்

மேட்டுப்பாளையம் வட்டார வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை, வருவாய்த் துறை சார்பில் பிரதமரின் விவசாயிகள்

மேட்டுப்பாளையம் வட்டார வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை, வருவாய்த் துறை சார்பில் பிரதமரின் விவசாயிகள் நுண்ணீர்ப் பாசனத் திட்ட விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
வேளாண் உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு வேளாண் உதவி இயக்குநர் சீனிராஜ் தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் ரங்கராஜன், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் நந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், வேளாண் உதவி இயக்குநர் சீனிராஜ் பேசியதாவது:
ஆண்டுதோறும் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவு குறையும்போது, சாகுபடி செய்யும் பயிர்களின் பரப்பளவும் குறைகிறது. பாசனத்துக்கு நீர்ப் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க சொட்டுநீர்ப் பாசனம், தெளிப்பு நீர்ப் பாசனம், நீர் தூவுவான் பாசன முறைகளை விவசாயிகள் கடைபிடித்து வருகின்றனர். இருப்பினும், பெரும்பாலான விவசாயிகள் அதை இன்னும் பின்பற்றாத நிலை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பிரதம மந்திரியின் விவசாயிகள் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின்கீழ் நடப்பு ஆண்டில் நுண்ணீர்ப் பாசனக் கருவிகளை மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு ரூ. 20.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த முகாம் நடைபெறுகிறது. நுண்ணீர்ப் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்களது நிலத்தின் சிட்டா-அடங்கல், நில வரைபடம், மண்,நீர்ப் பரிசோதனை அறிக்கை, ஆதார்-குடும்ப அட்டை, சிறு-குறு விவசாயிகள் சான்றிதழுடன் வேளாண், தோட்டக்கலைத் துறை அலுவலகங்களை அணுகி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.
இம்முகாமில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் கருவிகளை முகாமில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில் வைத்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர். இதில், காரமடை, கெம்மாரம்பாளையம், தோலம்பாளையம், மருதூர், மூடுதுறை, இலுப்பநத்தம் உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த 100 விவசாயிகள் கலந்துகொண்டனர்.
தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் நந்தினி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com