கோவை அரசு மருத்துவமனையில் மண்டல புற்றுநோய் மையம் திறப்பு

கோவை அரசு மருத்துவமனையில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்ட மண்டல புற்றுநோய் மையம் மக்கள் பயன்பாட்டுக்காக புதன்கிழமை திறக்கப்பட்டது.

கோவை அரசு மருத்துவமனையில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்ட மண்டல புற்றுநோய் மையம் மக்கள் பயன்பாட்டுக்காக புதன்கிழமை திறக்கப்பட்டது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1970- ஆம் ஆண்டுமுதல் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் கோவை,  திருப்பூர், ஈரோடு,  நீலகிரி,  சேலம், தருமபுரி,  கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பல லட்சம் ஏழை மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர். 
இந்நிலையில், கடந்த ஓரிரு ஆண்டுகளாக மருத்துவமனையின் கட்டமைப்பு நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சை மையம் தனிப் பிரிவில் செயல்பட்டு வந்தது. இதில் 35-க்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில்,  இம்மையம் 2012-ஆம் ஆண்டு மண்டல புற்றுநோய் சிகிச்சை மையமாக தரம் உயர்த்தப்பட்டது.
இதையடுத்து, மையத்துக்கான புதிய கட்டடம் கட்டவும், உபகரணங்கள் வாங்கவும் ரூ. 20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.  ஆனாலும்,  மத்திய அணு சக்தி ஆராய்ச்சி மையத்திடம் இருந்து அனுமதி உள்ளிட்ட காரணங்களால், ஒப்பந்தம் கோருவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, 2013-ஆம் ஆண்டு மண்டல புற்றுநோய் மையத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி 2016-ஆம் ஆண்டு நிறைவடைந்தது. ஏற்கெனவே செயல்பட்டு வந்த புற்றுநோய் சிகிச்சை பிரிவில் 40 படுக்கை வசதிகள் இருந்தன. மேலும்,  ரூ. 5 கோடியில் கூடுதலாக 40 படுக்கைகள் கொண்ட தரைத்தளத்துடன் 3 மாடி புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து நவீன அறுவை சிகிச்சை அரங்கம்,  தீவிர சிகிச்சை பிரிவு,  அல்ட்ரா சவுண்ட் அறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டது. மேலும், ரூ. 15 கோடியில் புற்றுநோய் பாதிப்புகளுக்கான நவீன சிகிச்சை கருவிகள் வாங்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதில் நவீன கருவியான ரேடியோதெரபி கருவியான "லீனியர் ஆக்ஸ்லேட்டர்' என்ற கருவி பொருத்த காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் புற்றுநோய் மையத்தை திறப்பதில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில்,  மருத்துவமனை டீன் டாக்டர் அசோகன் மண்டல புற்றுநோய் மையத்தை புதன்கிழமை திறந்துவைத்தார்.

நவீன கருவி பொருத்தப்படாமலே செயல்பட்டு வருகிறது
ஏற்கனவே இருந்த புற்றுநோய் சிகிச்சை பிரிவில் உள்ள கோபால்ட் என்ற பழைய ரேடியோதெரபி கருவியைக் கொண்டே தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  மண்டல புற்றுநோய் மையத்தில் பொருத்தப்பட்ட வேண்டிய லீனியர் ஆக்ஸ்லேட்டர் என்ற நவீன கருவி பொருத்தப்படாமலேயே மண்டல புற்றுநோய் மையம் செயல்பட்டுக்கு வந்துள்ளது. மேலும் லீனியர் ஆக்ஸ்லேட்டர் கருவி பொருத்த 6 மாதம் காலம் ஆகும் என மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com