திருமண மோசடி விவகாரம்: இளம்பெண் உள்பட நால்வரை 7 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

திருமணம் செய்வதாக கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் உள்பட 4 பேரை ஏழு நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

திருமணம் செய்வதாக கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் உள்பட 4 பேரை ஏழு நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
 சேலம் மாவட்டம்,  எடப்பாடி அருகே காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (32). ஜெர்மனி நாட்டில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரை கோவை,  பாப்பநாயக்கன்பாளையம் தனலட்சுமி நகரைச் சேர்ந்த சினிமா துணை நடிகையான மைதிலி என்கிற ஸ்ருதி (21) திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ. 41 லட்சம் வரையில் மோசடி செய்துள்ளார்.
 இதுகுறித்து பாலமுருகன் அளித்த புகாரின்பேரில் கோவை மாநகரக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து  ஸ்ருதி,  அவரது தாயார் சித்ரா,  சகோதரர் சுபாஷ்  (19),  உறவினர் பிரசன்ன வெங்கடேஷ் (38) ஆகியரைக் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
 இந்நிலையில்,  நால்வரையும் 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி கோரி கோவை 3-ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீஸார் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேலுச்சாமி,  ஸ்ருதி,  சித்ரா,  சுபாஷ், பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோரை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார். 
 இளம்பெண் ஸ்ருதியால் பாதிக்கப்பட்ட பரமத்தி வேலூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார்,  நீதிமன்றத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 தனியார் திருமண தகவல் மையம் மூலமாக ஸ்ருதியின் தொடர்பு கிடைத்தது. முதலில் புகைப்படம் பிடித்ததால்,  திருமணம் குறித்து பேசினேன். அடுத்தக்கட்டமாக இருதரப்பு பெரியவர்களும் பேசினர்.
 முதலில் நல்லவிதமாக பேச்சு கொடுத்தனர்.  நாளாக,  ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிப் பணம் கறக்க ஆரம்பித்தனர். இதுவரையில்  ரூ. 80 லட்சம் வரையில் பணமாகவும், நகையாகவும் கொடுத்துள்ளேன். இறுதியாகத்தான் அவர்களின் மோசடி தெரிந்தது.  என்னைப்போல் பிறரும் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காக போலீஸாரிடம் புகார் அளித்தேன் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com