அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஜெம் மருத்துவமனையில் 50 பேருக்கு உடல் பருமன் அறுவை சிகிச்சை

தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஜெம் மருத்துவமனையில் 50 பேருக்கு உடல் பருமன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஜெம் மருத்துவமனையில் 50 பேருக்கு உடல் பருமன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 இதுகுறித்து ஜெம் மருத்துவமனையின் உடல் பருமன் சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் பிரவீன்ராஜ்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உலகம் முழுவதும் உடல் பருமன் பாதிப்பால் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வாழ்க்கை முறை மாற்றத்தால் உடல் பருமன் பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம், மூட்டு வலி, இருதய நோய்கள், குறட்டை, குழந்தையின்மை, தைராய்டு பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
 தற்போது, உடல் பருமன் பாதிப்பு மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புகளுக்கு உடல் பருமன் அறுவை சிகிச்சை மூலம் தீர்வு காண முடிகிறது. பொதுவாக உடல் பருமன் பாதிப்புக்கு  உணவுப் பழக்கவழக்கத்தைக் கட்டுப்படுத்த தேவையில்லை. நமது வாழ்க்கை முறை மாற்றம் காரணமாகவே உடல்பருமன் பாதிப்பு ஏற்படுகிறது. சரியான நேரத்துக்கு உணவு உள்கொள்வது, உடற்பயிற்சி செய்வது, தூங்குவது போன்ற முறையான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும்.
தமிழகஅரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உயிர்காக்கும் சிகிச்சையாக உடல் பருமன் அறுவை  சிகிச்சைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இரண்டாவது மருத்துவமனையாக ஜெம் மருத்துவமனையில் உடல்பருமன் அறுவை சிகிச்சை அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாதம்தோறும் 5 பேருக்கு உடல் பருமன் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டு  9 மாதங்களில் 50 பேருக்கு அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உடல் பருமன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  50 பேரும் குணமடைந்து தற்போது உடல் ஆரோக்கியத்துடன் உள்ளனர். மேலும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாதம் 10 உடல் பருமன் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com