தொடங்கியது வேளாண் கண்காட்சி: பார்வையாளர்களைக் கவர்ந்த ரூ.75 லட்சம் மதிப்புள்ள குதிரை

கோவை கொடிசியா வளாகத்தில் 18ஆவது அக்ரி இன்டெக்ஸ் வேளாண் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கோவை கொடிசியா வளாகத்தில் 18ஆவது அக்ரி இன்டெக்ஸ் வேளாண் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
வேளாண்மைப் பல்கலைக்கழகம், கால்நடை, விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், மீன்வளப் பல்கலைக்கழகம், வேளாண் இயந்திர உற்பத்தியாளர் சங்கம், நபார்டு உள்ளிட்ட நிறுவனங்களின் ஆதரவுடன் கொடிசியா நடத்தும் இந்த கண்காட்சியில் இந்த ஆண்டு 400க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
 இதில், இத்தாலி, இஸ்ரேல், ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா, சீனா, ஸ்வீடன், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த வேளாண் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்கள், விதைகள், இடுபொருள்கள், சொட்டு நீர்ப்பாசன கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன.
இந்த கண்காட்சியில் சூரிய சக்தியில் இயங்கும் பம்ப்செட்டுகள், சொட்டு நீர்ப் பாசனம், துல்லியப் பண்ணை, பண்ணை இயந்திரமயமாக்கல், மண்ணில்லா விவசாயம், தானியங்கி முறைகள், மதிப்புக் கூட்டுப் பொருள்கள், அறுவடை பின்சார் தொழில்நுட்பம், வேளாண் சந்தை, கால்நடை வளர்ப்பு, மீன், கால்நடை வளர்ப்புக்கு தனித்தனியே அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
வேளாண் இயந்திரங்கள், உபகரணங்கள், பாசனக் கருவிகள், கால்நடை பராமரிப்பு, வேலிகள், எடைக் கருவிகள், பம்புகள், உரம், விதை உள்ளிட்ட பல்வேறு வகையான வேளாண் சார்ந்த பொருள்கள் விவசாயிகளின் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.
 மேலும், மாடித் தோட்டம், ஒருங்கிணைந்த பண்ணையம், கீரை வளர்ப்பு, காய்கறித் தோட்டம் போன்றவற்றை விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் விளக்கும் வகையில் மாதிரித் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியின் ஒரு பகுதியில் ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, கோழிகள், மீன்கள் வளர்ப்பு குறித்த செயல்விளக்கத் திடல் அமைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியின் குதிரைபண்ணை விளக்கத் திடலில் இடம் பெற்றிருந்த ரூ.75 லட்சம் மதிப்புள்ள குதிரை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இதுகுறித்து அந்த அரங்கின் பொறுப்பாளர் கே.சரவணன் கூறும்போது, ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பதைப் போன்று குதிரை வளர்ப்பும் தற்போது பிரபலமடைந்து வருகிறது. சவாரி செய்யும் நோக்கத்துக்காக மட்டுமன்றி குதிரை வளர்ப்பை பெருமையாகக் கருதும் பண்ணையாளர்களும் இருக்கின்றனர்.
அவர்களைக் கவரும் நோக்கில் இந்த கண்காட்சியில் முதல் முறையாக குதிரை வளர்ப்பை விளக்கும் அரங்கு அமைத்திருக்கிறோம். இங்குள்ள ஷாலினி என்ற பெயருள்ள இந்த குதிரைக்கு வயது இரண்டரை. இது மார்வாரி இனத்தைச் சேர்ந்தது. 5.29 அடி உயரம் உள்ள இந்த குதிரையின் விலை ரூ.75 லட்சமாகும். பொதுவாக இந்த இன குதிரைக் குட்டிகள் ரூ.4 லட்சம் முதல் விற்பனை செய்யப்படுகின்றன.
 இந்த வகை குதிரைகளின் பூர்வீகம் ராஜஸ்தான் மாநிலமாகும். இவை அனைத்து நிறங்களிலும் இருக்கும். உலகின் பழைமையான குதிரை இனங்களில் ஒன்று என்பதாலும், போர்க்களத்தில் சிறந்த பங்களிப்புக்கும், விசுவாசத்துக்கும் பெயர் பெற்றது என்பதாலும் பழங்காலம் முதலே மார்வாரி குதிரைகள் அனைவராலும் விரும்பி வளர்க்கப்படுகின்றன. நீண்டதொலைவு பயணம், போலோ விளையாட்டுக்கு ஏற்ற இந்த குதிரையை, பெரிய அளவில் தோட்டம் வைத்திருப்பவர்கள் தோட்டத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கும், கண்காட்சி, இனப்பெருக்கம் போன்ற நோக்கங்களுக்கும் பயன்படுத்துகின்றனர்.  சத்தியமங்கலத்தில் உள்ள எங்களது குதிரை பண்ணையில் 60க்கும் மேற்பட்ட குதிரைகளை வளர்த்து வருவதுடன், கோவை நவ இந்தியா பகுதியில் அலெக்ஸாண்டர் என்ற பெயரில் குதிரையேற்ற பயிற்சி மையத்தையும் நடத்தி வருகிறோம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com