பேரிடர் மேலாண்மைப் பயிற்சியின்போது மாணவி உயிரிழந்த சம்பவம்: பயிற்சியாளர் சிறையிலடைப்பு; பெண் உள்பட 4 பேரிடம் விசாரணை

கோவை அருகே தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சியின்போது மாடியிலிருந்து குதித்த மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டு சிறையில்

கோவை அருகே தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சியின்போது மாடியிலிருந்து குதித்த மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவருக்கு உதவியதாக பெண் உள்பட 4 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையை அடுத்த ஆலாந்துறை நாதேகவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் நல்ல கவுண்டர் மகள் லோகேஷ்வரி (19). இவர் நரசீபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை கல்லூரியில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி நடைபெற்றது. சென்னை வண்டலூரைச் சேர்ந்த பயிற்சியாளர்
ஆறுமுகம் (27) பயிற்சி அளித்தார். அப்போது, பயிற்சியாளர் இரண்டாவது மாடியில் இருந்து மாணவி லோகேஷ்வரியை குதிக்கச் சொல்லியுள்ளார். ஆனால், அவர் பயத்தால் மறுத்துள்ளார். அப்போது ஆறுமுகம் அவரைத் தள்ளி விட்டார்.
இதில், லோகேஷ்வரி முதல் மாடி சாளரத் தடுப்பு மீது (சன் ஷேடு) மோதி தலையில் அடிபட்டு கீழே விழுந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவத்துக்கு தமிழகம் முழுவதிலும் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. லோகேஷ்வரியை பயிற்சியாளர் தள்ளிவிடும் விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது. பயிற்சியாளர் ஆறுமுகம், அவருக்கு உதவியவர்கள், கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இது குறித்து ஆலாந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து பயிற்சியாளர் ஆறுமுகத்தைக் கைது செய்தனர். விசாரணையில், அவர் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தில் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றுள்ளதாக போலியாகச் சான்றிதழும், கடிதமும் தயாரித்துள்ளது தெரியவந்தது. போலி சான்றிதழ் மூலமாகவே கடந்த ஆறு ஆண்டுகளாகத் தமிழகம் முழுவதிலும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் மாணவர்களுக்கு அவர் பயிற்சி அளித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: இதனிடையே கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர், கைது செய்யப்பட்ட ஆறுமுகத்திடம் விசாரணை நடத்தினர். ஆனால், அவரிடம் இருந்து காவல் துறையினருக்குப் போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைக் கூறினாராம். அதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் கோவை குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றத்தில் (ஜே.எம்.2) சனிக்கிழமை பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 7 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த காவல் துறையினர் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆறுமுகத்தை ஜூலை 27ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதித் துறை நடுவர் ஜி.சம்பந்தம் உத்தரவிட்டார். அவரை போலீஸ் காவலில் விசாரிப்பது தொடர்பான மனு மீதான விசாரணை திங்கள்கிழமைக்கு (ஜூலை 16) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பயிற்சியாளருக்கு உதவியதாக பெண் உள்பட 4 பேரிடம் விசாரணை: இதனிடையே, பயிற்சியாளர் ஆறுமுகத்துக்கு உதவியதாக கன்னியாகுமரியைச் சேர்ந்த அசோக் (36), காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார்(38), ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையைச் சேர்ந்த ராஜகோபால் (25), மற்றும் வினிதா (23) ஆகிய நான்கு பேரிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பேரூர் டிஎஸ்பி வேல்முருகன் கூறுகையில்,  பயிற்சியாளர் ஆறுமுகத்துக்கு உதவியதாக நான்கு பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.இதில், அசோக் ஈரோட்டில் குடிநீர் கேன் விற்பனை செய்து வருகிறார். ஆறுமுகத்துக்கு உதவியாளராக செயல்பட்டு வந்துள்ளார். அவர்ஆறுமுகத்துக்கு போலி சான்றிதழ் தயாரித்துக் கொடுத்ததாக வெளியாகும் தகவல் உண்மையில்லை. ஆறுமுகத்தை காவலில் எடுத்து விசாரணை நடத்தினால் மேலும் பல தகவல்கள் வெளியாகும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com