மேட்டுப்பாளையம் பகுதியில் தினசரி ரூ. 3 கோடி வர்த்தகம் பாதிப்பு: 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு

கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் லாரிகள் வேலைநிறுத்தத்தால், மேட்டுப்பாளையம் பகுதியில் தினசரி

கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் லாரிகள் வேலைநிறுத்தத்தால், மேட்டுப்பாளையம் பகுதியில் தினசரி ரூ.3 கோடி அளவில் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 10 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
இது குறித்து மேட்டுப்பாளையம் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி, செயலர் சந்தோஷ்குமார் கூறியதாவது : 
தமிழகத்தில் நாமக்கல் பகுதியை அடுத்து மேட்டுப்பாளையம் பகுதியில் லாரி வாகனத் தொழில் பிரதானமாக உள்ளது. இங்கு 3000த்துக்கும் மேற்பட்ட வெளியூர் லாரிகள் உட்பட உள்ளூர் லாரிகள், மினி சரக்கு வாகனங்கள் என 4500 வாகனங்கள் இயங்கி வருகின்றன. மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் உருளைக்கிழங்கு மண்டிகளுக்கும், மொத்த நீலகிரி காய்கறி மண்டிகளுக்கும் தினசரி நீலகிரி, கர்நாடக பகுதிகளிலிருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு தமிழ்நாடு, கேரளம் உள்பட வெளியூர் பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. மேலும்,  இப் பகுதியிலிருந்து தினமும் காய்கறிகளுடன், மரச் சாமான்கள், வாழைக்காய், பேப்பர் ரோல்கள், ஜவுளி உற்பத்திப் பொருள்கள் போன்றவை சென்னை, மும்பை கர்நாடகா, கேரளம்  உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது மேட்டுப்பாளையம் தாலுகாவில் லாரிகள் உள்பட அனைத்து சரக்கு வாகனங்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்று நிறுத்தி வைக்கப்பட் டிருப்பதால் இப்பகுதியில் தினசரி ரூ. 3 கோடி அளவில் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத் தொழிலை நம்பியுள்ள லாரி ஓட்டுநர்கள்,
 கிளீனர்கள் உள்பட லாரி தொழில் சார்ந்துள்ள 10 ஆயிரம் பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.  
நீலகிரி மொத்த காய்கறி மார்க்கெட்டில்: மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையிலுள்ள நீலகிரி மொத்த காய்கறி மண்டிகளுக்கு தினமும் உதகை, குன்னூர், கோத்தகிரி உட்பட சுற்றுப்புற கிராமங்களிலிருந்து உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காரட், பீட்ரூட், முள்ளங்கி, பீன்ஸ் உள்ளிட்ட மலை காய்கறிகள் லாரிகள் மூலம் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு, தினசரி ஏலத்துக்குப் பின்னர் லாரிகள் மூலம் தமிழகம், கேரளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள  வேலைநிறுத்தத்தில் பெரும்பாலான லாரிகள் கலந்து கொண்டாலும், நீலகிரி பகுதிகளிலிருந்து வரும் காய்கறிகள் சிறிய சரக்கு வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்டு ஏலத்துக்குப் பின்னர் வெளியூர்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. காய்கறிகள் அழுகும் பொருள் அட்டவணையின்கீழ் வருவதால் நீலகிரி காய்கறி விவசாயிகளின் நலன்கருதி, மொத்த மார்க்கெட்டில் வழக்கம்போல் ஏலம் விடப்பட்டு காய்கறி மூட்டைகள் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. 
இதனால் நீலகிரி விவசாயிகள் வழக்கம்போல் அறுவடை செய்த மலை காய்கறிகளை மேட்டுப்பாளையம் காய்கறி மார்க்கெட்டுக்கு சிறிய வாகனங்கள் மூலம் கொண்டு வருவதைக் காண முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com