இரு வழிப்பறி வழக்குகளில் 6 பேருக்கு 7 ஆண்டு சிறை: கோவை நீதிமன்றம் தீர்ப்பு 

கோவை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேருக்கு நீதிமன்றம் புதன்கிழமை 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. 

கோவை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேருக்கு நீதிமன்றம் புதன்கிழமை 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. 
திருப்பூர் மாவட்டம், அவிநாசி, வெள்ளியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நிஜந்தன் (25). பெரியம்மபாளையம் பகுதியை சேர்ந்தவர் அருள்ஜோதி (25). இவர்கள் இருவரும்  கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர்.  
இந்த நிலையில்,  இருசக்கர வாகனத்தில் கல்லாறு பழப் பண்ணைக்கு 2013 ஆகஸ்ட் 18-ஆம் தேதி சென்றனர்.  பழப் பண்ணையை பார்த்துவிட்டு வெளியே வந்த அவர்களை 4 பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி ஒன்றரை பவுன் நகை மற்றும் செல்லிடப்பேசி, ரூ.500 ஆகியவற்றை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
 இதுதொடர்பாக கல்லாறு ஆதிவாசி காலனியை சேர்ந்த நஞ்சன் (58), சிறுமுகை பெத்திக்குட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் (44),  ஊமப்பாளையம் மேலத்தெருவைச் சேர்ந்த சூம்பி என்கிற முனியப்பன் (38) மற்றும் முனியப்பன் (29) ஆகியோரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 
கோவை முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில்  இறுதிகட்ட விசாரணை முடிந்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. 
இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நஞ்சன்,  ராஜேந்திரன்,  சூம்பி என்கிற முனியப்பன், முனியப்பன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மதுரசேகரன் தீர்ப்பளித்தார். இந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மற்றொரு வழிப்பறி வழக்கில் 3 பேருக்கு 7 ஆண்டு சிறை
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்,  தாசம்பாளையம், பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர்கள் தீபா (42), அனிதா (42). 
இவர்கள் இருவரும் மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு அகத்தியர் ஞானபீடத்துக்கு 2013 ஆகஸ்ட் 17-ஆம் தேதி சென்று கொண்டிருந்தனர்.  அப்போது அவர்களை 3 பேர் வழிமறித்து 3 பவுன் நகையைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக, மேட்டுப்பாளையம், வெள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த குண்டுபாலன் என்கிற பாலன் (42),  ஊமப்பாளையம், மேலத்தெருவைச் சேர்ந்த சூம்பி என்கிற முனியப்பன் (38),  விஜயன்(34) ஆகியோரை மேட்டுப்பாளையம் காவல் துறையினர் கைது செய்தனர். 
இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி கே.ஆர்.மதுரசேகரன் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கினார். இதில், விஜயன்,  முனியப்பன்,  பாலன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். இரண்டு வழிப்பறி வழக்கிலும் தொடர்புடைய சூம்பி என்கிற முனியப்பனுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com