சாமானியர்களுக்கு எட்டாக்கனியாகும் உதகை சிறப்பு மலை ரயில் பயணம்

கோடை சீசனை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு மலை ரயிலின் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தியிருப்பது சுற்றுலாப் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோடை சீசனை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு மலை ரயிலின் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தியிருப்பது சுற்றுலாப் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் 1908-ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டது.  பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த ரயிலில் பயணிப்பது சுகமான அனுபவமாகும்.  ஆகவே இதில் பயணிக்க ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வந்து செல்கிறார்கள். 
2005-இல் யுனெஸ்கோ நிறுவனம் நீலகிரி மலை ரயிலை உலக புராதன சின்னமாக அறிவித்த பின்னர் இதில் பயணிக்க வரும் அயல்நாட்டு பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 
மேட்டுப்பாளையத்திலிருந்து தினமும் காலை 7.10 மணிக்கு உதகை செல்லும் மலை ரயிலில் 200 பேர்வரை பயணிக்கின்றனர். இந்த ரயிலில் உதகைக்கு முதல் வகுப்பு கட்டணமாக ரூ. 205-ம்,  2-ஆம் வகுப்பு கட்டணமாக ரூ. 30-ம் வசூலிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை இயக்கப்பட்டு வந்த கோடைக் கால சிறப்பு மலை ரயில்களிலும் இதே கட்டணம்தான் வசூலிக்கப்பட்டு வந்தது. கோடை சிறப்பு மலை ரயில் 2013-ஆம் ஆண்டு வரை இயக்கப்பட்டது.  மலைரயில் என்ஜின் பற்றாக்குறை,  நிலக்கரி பற்றாக்குறை,  என்ஜினின் இழுவைத்திறன் குறைவு போன்ற காரணங்களினால் தொடர்ந்து 4 ஆண்டுகளாக இந்த சிறப்பு மலை ரயில் இயக்கப்படவில்லை. 
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த ஆண்டு மார்ச் 31 முதல் ஜூன் 26-ஆம் தேதிவரை கோடைகால சிறப்பு மலைரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு அனைத்து தரப்பினரின் வரவேற்பை பெற்றுள்ளது.  ஆனால் இந்த சிறப்பு ரயிலின் கட்டணம் பன்மடங்கு 
உயர்த்தப்பட்டுள்ளது.  
சிறப்பு மலை ரயிலின் முதல் வகுப்புக் கட்டணம் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வரை பெரியவர்களுக்கு ரூ. 1100,  12 வயது வரை உள்ள சிறியவர்களுக்கு ரூ. 650 எனவும்,  2-ஆம் வகுப்பு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 800,  சிறியவர்களுக்கு ரூ. 500 எனவும் அறிவித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தக் கட்டண உயர்வால் கோடை ரயிலில் பயணிப்பது என்பது சாமானியர்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் எட்டாக் கனியாகி விட்டது. 
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் டிஎல்எஸ். ராஜேந்திரன் கூறியதாவது: 
கடந்த காலங்களில் இயக்கப்பட்டு வந்த உதகை சிறப்பு மலை ரயிலில் சாதாரண கட்டணமே வசூலிக்கப்பட்டு வந்தது.  ஆனால் இந்த ஆண்டு இயக்கப்படும் சிறப்பு மலைரயிலில் சாமானியர்கள் பயணிக்க முடியாத அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை ரயில்வே நிர்வாகம் மறுபரிசீலனை செய்து சாதாரண கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com