பத்தாம் வகுப்புத் தேர்வு: கோவை மாவட்டத்தில் 95.86 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

கோவை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் 95.86 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும்

கோவை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் 95.86 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.56 சதவீதம் குறைவாகும். இதன் மூலம் மாநில அளவிலான தகுதிப் பட்டியலில் கோவை மாவட்டம் 15-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
கோவை, பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை வருவாய் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை 20,026 மாணவர்கள், 20,281 மாணவிகள் உள்ளிட்ட 40,307 பேர் எழுதியிருந்தனர். இவர்களில் 18,844 மாணவர்களும், 19,794 மாணவிகளும் என மொத்தம் 38,638 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.86 சதவீத தேர்ச்சியாகும்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 96.42 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 0.56 சதவீதம் குறைந்துள்ளது. இதன் மூலம் கோவை மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் 15-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கோவையில் 2015-ஆம் ஆண்டில் 95.65 சதவீதம் பேரும், 2016-இல் 96.22 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
அரசுப் பள்ளிகளைப் பொருத்தவரை, மாவட்டத்தில் 146 பள்ளிகளைச் சேர்ந்த 10,762 பேர் தேர்வெழுதியதில், 9,964 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி விகிதம் 92.59 சதவீதமாகும். பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் 20 பேர் தேர்வெழுதியதில், அனைவருமே தேர்ச்சி பெற்றுள்ளனர். காது கேளாத, வாய் பேச இயலாத 75 பேர் தேர்வெழுதியதில், 52 பேரும், இதர மாற்றுத் திறனாளிகள் 121 பேர் தேர்வெழுதியதில் 116 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் 629 பேர் 481 மதிப்பெண்களுக்கு மேலும், 451 முதல் 480 மதிப்பெண்கள் வரை 3,741 பேரும், 426 முதல் 450 வரை 3,746 பேரும், 401 முதல் 425 மதிப்பெண்கள் வரை 3,773 பேரும் பெற்றுள்ளனர். கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சி சதவீதம் குறைந்திருப்பது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் பி.அய்யண்ணன் கூறும்போது, இந்த ஆண்டு கணிதப் பாடத்தில் அதிகமானோர் தோல்வி அடைந்திருப்பதே தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு காரணம்.
அதேபோல, மாநகராட்சிப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதமும் குறைந்துள்ளது. அடுத்த ஆண்டு இதுபோல நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒன்று அல்லது இரு பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கு வரும் 28-ஆம் தேதி உடனடித் தேர்வு நடைபெற உள்ளது என்றார்.
சிறைக் கைதிகள்
கோவை, சேலம் மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் 55 பேர் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை எழுதியிருந்த நிலையில், இவர்களில் 53 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவை சிறையில் 49 பேரும், சேலம் சிறையில் 6 பேரும் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை எழுதியிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com