ஸ்மார்ட் விளம்பர பலகைகளை நிறுவ நெடுஞ்சாலைத் துறை எதிர்ப்பு: மாநகராட்சிக்கு கடிதம்

கோவை மாநகராட்சி சார்பில் நெடுஞ்சாலைகளில் ஸ்மார்ட் விளம்பர பலகைகளை நிறுவ நெடுஞ்சாலைத் துறை எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

கோவை மாநகராட்சி சார்பில் நெடுஞ்சாலைகளில் ஸ்மார்ட் விளம்பர பலகைகளை நிறுவ நெடுஞ்சாலைத் துறை எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
போக்குவரத்து சிக்னல் மற்றும் சாலையோரங்களில் விளம்பரப் பலகைகளை நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பின் நிர்வாகி கதிர்மதியோன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் போக்குவரத்துக்கு இடையூறாக, சாலை விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் சாலையோரம் மற்றும் போக்குவரத்து சிக்னல் ஆகிய பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை 12 வாரங்களுக்குள் அகற்ற நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு சுற்றறிக்கை அனுப்பினார். அதில் சாலையோரம் மற்றும் போக்குவரத்து சிக்னல்களில் நிறுவப்பட்ட விளம்பரப் பலகைகளை ஒழுங்குமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கோவை மாநகராட்சி அண்மையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் மாநகராட்சிப் பகுதிகளில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் காற்றின் தரம் மற்றும் சுற்றுச்சூழலின் தன்மையைக் கண்டறிந்து மேம்படுத்தும் விதமாக ரூ. 11 லட்சம் மதிப்பில் நகரின் 30 இடங்களில் காற்றுத் தர அளவீட்டு சாதனங்கள் (ஸ்மார்ட் போர்டு) பொருத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இதில் சுற்றுச்சூழல் தகவல் தருவதுடன் தனியார் விளம்பரங்களை வெளியிட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் பி.செல்வக்குமார், மாநகராட்சி ஆணையர் டாக்டர் விஜயகார்த்திகேயனுக்கு அனுப்பியுள்ள கடித விவரம்:
கோவை மாநகராட்சி சார்பில் தனியார் பங்களிப்புடன் 30 இடங்களில் ஸ்மார்ட் விளம்பர பலகை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சில இடங்கள் நெடுஞ்சாலைப் பகுதியில் அமைக்கப்படுகிறது. ஆனால், தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பர பலகைகளை நிறுவக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. மேலும் விளம்பரப் பலகைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை புதுப்பிக்கவும், புதிய உரிமம் வழங்குவதற்கும் தடை விதித்துள்ளது. எனவே, நெடுஞ்சாலைக்கு உள்பட்ட பகுதிகளில் விளம்பரப் பலகை, ஸ்மார்ட் விளம்பரப் பலகை போன்றவை நிறுவ மாநகராட்சி தரப்பில் உரிமம் வழங்கக் கூடாது எனக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com