வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுய தொழில் தொடங்கக் கடன் உதவி: மாவட்ட ஆட்சியர் அழைப்பு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான திட்டத்தின் கீழ் (யூ.ஒய்.இ.ஜி.பி.) கடன் உதவி

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான திட்டத்தின் கீழ் (யூ.ஒய்.இ.ஜி.பி.) கடன் உதவி பெற மாவட்டத் தொழில் மையத்தை அணுகலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தின் அனைத்து கிராமங்கள், நகரங்களில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் யூ.ஒய்.இ.ஜி.பி. திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் உற்பத்தித் தொழில்களை அதிகபட்சம் ரூ. 10 லட்சம் முதலீட்டிலும், சேவைத் தொழில்களை அதிகபட்சம் ரூ. 3 லட்சம் முதலீட்டிலும், வியாபாரத்தை அதிகபட்சம் ரூ. 1 லட்சம் முதலீட்டிலும் தொடங்கலாம். மேற்கண்ட மனுதாரர்களுக்கு மாநில அரசால் 25 சதவீதம் மானியம், அதிகபட்சமாக ரூ. 1.25 லட்சம் வழங்கப்படும். 
இதற்கு 5 சதவீதம் சுய முதலீடு அவசியம். இந்தத் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க 18 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்தக் கடன்களைப் பெறுவதற்கு சொத்துப் பிணையம் தேவையில்லை. மேலும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகவும், சிறப்புப் பிரிவினருக்கு 45 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் குறைந்தபட்சம் 8ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்காக இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். தகவல்களைச் சரிபார்த்த பின்னர் உரிய ஆவணங்கள், சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இணையதளம் மூலமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து மாவட்டத் தொழில் மையத்தில் நடைபெறும் நேர்காணலின்போது ஆவணங்கள் சரிபார்க்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் 325 பேருக்கு ரூ. 1.75 கோடி மானியத்துடன், ரூ. 6 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com