உறுப்பினர்களை நியமித்து நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களை செயல்படுத்த வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கோவை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக்

கோவை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமித்து அவற்றை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியரைத் தலைவராகவும், மக்கள் பிரதிநிதிகள், பதிவு பெற்ற நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரை உறுப்பினர்களாகக் கொண்ட மாவட்ட அளவிலான நுகர்வோர் பாதுகாப்புக் குழுக்களை நியமிக்க வேண்டும் என்றும் இந்த குழு நுகர்வோர் தொடர்புடைய குறைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் கடந்த 2009 ஆம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
 மாவட்டங்களில் மாவட்ட அளவிலான நுகர்வோர் பாதுகாப்புக் குழுவைப் போல, மாநில அளவிலான பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக சென்னையில் மாநில நுகர்வோர் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் மாவட்டங்களில் தீர்வு காண முடியாத பிரச்னைகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் தலைமையில் அமையும் குழு தீர்வு காண வேண்டும் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 இருப்பினும், பெரும்பாலான மாவட்டங்களில் இந்தக் குழு அமைக்கப்படவில்லை என்றும் 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த மாவட்டங்களிலும் உறுப்பினர்கள் நியமிக்கப்படாததால் குழுக்கள் செயல்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டி வந்த கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் நுகர்வோர் அமைப்பின் செயலர் என்.லோகு, நுகர்வோர் குறைதீர் மன்றங்களுக்கு உறுப்பினர்களை உடனடியாக நியமித்து அவற்றை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
 இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணி பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, அனைத்து 
மாவட்டங்களிலும், மாநில நுகர்வோர் பாதுகாப்புக் குழுவுக்கும் 5 வாரங்களில் உறுப்பினர்களை நியமித்து, குழுக்களை செயல்படச் செய்ய வேண்டும் என்றும் குழு உறுப்பினர் நியமனம் குறித்த விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
 இது குறித்து என்.லோகு கூறும்போது, உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இதை அரசு உடனடியாக அமல்படுத்தும் என்று நம்புகிறேன். தமிழகத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை, நகராட்சி, போக்குவரத்து, வருவாய்த் துறை உள்ளிட்ட ஒவ்வொரு துறைகளிலும் நுகர்வோர் பாதுகாப்புக் குழுக்களை அமைத்து, காலாண்டுக்கு ஒரு முறை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று அரசாணை எண் 389-இல் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட, மாநில அளவிலான நுகர்வோர் பாதுகாப்புக் குழுக்களைத் தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் நுகர்வோர் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான குழுக்களை அமைத்து கூட்டங்களை நடத்த வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com