நீராதாரங்களைப் பாதுகாக்கக் கோரி கொ.ம.தே.க. ஆர்ப்பாட்டம்

கொங்கு மண்டலத்தில் உள்ள நீராதாரங்களைப் பாதுகாத்து, வளப்படுத்தக் கோரி கொங்குநாடு மக்கள்

கொங்கு மண்டலத்தில் உள்ள நீராதாரங்களைப் பாதுகாத்து, வளப்படுத்தக் கோரி கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியினர் கோவையில் வெள்ளிக்கிழமை  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு,  அக்கட்சியின் மாநில விவசாய அணிச் செயலாளர் எம்.கோபாலசாமி தலைமை வகித்தார். 
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் கெளசிகா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை இணைக்க வேண்டும். நொய்யல் ஆற்றைத் தூய்மைப் படுத்தி, குப்பை, கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும்.  ஆச்சாங்குளத்தை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும். சூலூர், சுல்தான்பேட்டையில் உள்ள குட்டைகளில் குப்பையை அகற்றி, நீர் வரும் பாதைகளைச் சீரமைக்க வேண்டும். மலையம்பாளையம் கிராமத்தில் நீர்த்தேக்கம் அமைக்க வேண்டும்.
 பவானி ஆறு மாசுபடுவதைத் தடுக்க வேண்டும். பவானி ஆற்றின் குறுக்கே உள்ள கதவணையை நீக்க வேண்டும். ஆனைமலையாறு மற்றும் நீராறு-நல்லாறு திட்டங்களை விரைவாக நிறைவேற்ற வேண்டும். 
 பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு நேரடியாக ஆழியாறு அணையிலிருந்து குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்க வேண்டும். பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன நீர்த் திட்டத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை விவசாயம் இல்லாத வெவ்வேறு பயன்பாடுகளுக்கு மாற்றியுள்ளதால், அந்த நிலங்களை ஆயக்கட்டிலிருந்து நீக்கிவிட்டு, விடுபட்டுள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
 கோதவாடி குளம், வேதம்பாடி வலசு குளம் போன்ற அனைத்து குளம், குட்டைகளுக்கும் மழைக் காலங்களில் கிடைக்கும் உபரிநீரைக் கொண்டு நிரப்பி, நிலத்தடி நீர் உயர வழிவகை செய்ய வேண்டும். கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள குளங்களில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து, ஆக்கிரமிப்புக் கட்டடங்களை அகற்ற வேண்டும்.
 சங்கனூர் ஓடையை தூர்வாரி தூய்மைப்படுத்த வேண்டும். குளங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிச்சி, சின்னவேடம்பட்டி, சிங்காநல்லூர், உக்கடம் குளங்களைத் தூய்மைப்படுத்துவதுடன், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
மாநகராட்சிப் பகுதிக்கு குடிநீர் கொண்டுவரும் குழாய்களைச் சீரமைத்து, தண்ணீர் வீணாவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். சித்திரைச் சாவடி தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. 
 இதில், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் செல்வம், கே.நித்யானந்தன், பி.பிரேம், ஆர்.எஸ்.தனபால், குழந்தைவேலு, வழக்குரைஞர் ராஜேந்திரன், எஸ்.ஆர்.வைரவேல், இளைஞரணி மண்டலச் செயலர் வி.பெரியசாமி, தலைமை நிலையச் செயலர் கே.வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com