நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட  155 வீடுகளை இடிக்கும் பணி துவக்கம்

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட சீரநாயக்கன்பாளையத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 155 வீடுகளை இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட சீரநாயக்கன்பாளையத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 155 வீடுகளை இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட சீரநாயக்கன்பாளையம் 20 ஆவது வார்டில் எம்.ஜி.ஆர். நகர், கருணாநிதி நகரில் கிருஷ்ணாம்பதி, கோளராம்பதி குளத்துக்குச் செல்லும் நீர்வழிப் பாதையை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகத்திடம் சமூக ஆர்வலர்கள் முறையிட்டனர். 
எம்.ஜி.ஆர். நகரில் 117 வீடுகளும், கருணாநிதி நகரில் 38 வீடுகளும் என மொத்தம் 155 வீடுகள் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து, குடியிருப்புகளை காலி செய்ய மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால், குடியிருப்புவாசிகள் மாற்று இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, அவர்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் மலுமிச்சம்பட்டி அன்பு நகரில் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 135 பேர் தங்களது வீடுகளை காலி செய்து குடிசை மாற்று வாரியத்தால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு சென்றனர். 
 ஆனால், 20 பேர் வீடுகளை காலி செய்யாமல் காலதாமதம் செய்து வந்தனர். இதையடுத்து,  வீட்டை காலி செய்யுமாறு அவர்களுக்கு மாநகராட்சி மற்றும் குடிசை மாற்று வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. 
இந்நிலையில், முதல்கட்டமாக எம்.ஜி.ஆர். நகரில் காலி செய்யப்பட்ட வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது. மேலும் ஒரிரு தினங்களில் அனைத்து வீடுகளும் முழுமையாக இடிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 90 ஆண்டு பழையான கட்டடம் இடிப்பு: கோவை, பெரியகடை வீதி அருகே வின்சென்ட் சாலையில் இருந்து கோட்டைமேடு பிரிவு துவங்கும் பகுதியில் இனாயதுல்லா என்பவருக்கு சொந்தமான கட்டடம் உள்ளது. 
சுமார் 13 சென்ட் பரப்பளவில் உள்ள இந்தக் கட்டடம் 90 ஆண்டு பழமை வாய்ந்தது. இதில் 23 கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த கட்டடம் தரைத்தளம் மற்றும் முதல்தளம் கொண்டதாகும். இந்த கட்டடம் பழமையானதால் இதில் செயல்பட்டு வந்த 4 கடைகளை தவிர மீதமுள்ள கடைகளை அதன் உரிமையாளர்கள் காலி செய்துள்ளனர்.
பழைய கட்டடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்கண்ட பகுதி மக்கள் தரப்பில் மாநகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி நகரமைப்பு பிரிவின் சார்பில் மேற்கண்ட கட்டடத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் பழமையான இந்தக் கட்டடம் பொக்லைன் இயந்திரங்கள் மூலம்
 வெள்ளிக்கிழமை இடிக்கும் பணி தொடங்கியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com