ஐரோப்பிய ஒன்றியம், ரஷியா, கனடாவுடனான வர்த்தக ஒப்பந்தங்களை விரைவுபடுத்த வேண்டும்: மத்திய அரசு பிரதிநிதிகளிடம் ஐ.டி.எஃப். அமைப்பு வலியுறுத்தல்

இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம், ரஷியா, கனடா உள்ளிட்ட

இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம், ரஷியா, கனடா உள்ளிட்ட நாடுகளுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பு (ஐ.டி.எஃப்.) வலியுறுத்தியுள்ளது.
 இந்திய ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு சர்வதேச அளவில் உள்ள வாய்ப்புகள், சவால்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தியாளர்களுக்கும், மத்திய அரசுக்கும் தெரிவிப்பதற்காக ஐ.டி.எஃப். அமைப்பு, ஜி.என்.பி.சி. என்ற பன்னாட்டு வர்த்தகத் துறை சார்ந்த ஆய்வு நிறுவனத்தின் மூலம் ஆய்வறிக்கையைத் தயாரித்துள்ளது. இந்த ஆய்வறிக்கையை மத்திய அரசு பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 இதில், சர்வதேச வர்த்தக நிபுணர் சுதாகர் கஸ்தூர் பங்கேற்று ஆய்வறிக்கை தொடர்பாக விளக்க உரையாற்றினார். இதைத் தொடர்ந்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் துணைத் தலைவர் பழனிசாமி, மத்திய வர்த்தக, தொழில் துறை அமைச்சக இணைச் செயலர் கேசவ் சந்திரா, ஜவுளி அமைச்சகத்தின் வர்த்தக ஆலோசகர் அதிதி ஆகியோரிடம் அறிக்கையை வழங்கினார்.
 இந்த நிகழ்ச்சியில் ஐ.டி.எஃப். அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன், இயக்குநர்கள் ஸ்ரீஹரி பாலகிருஷ்ணன், மனோஜ்குமார் ஆகியோர் பேசும்போது,  இந்திய ஏற்றுமதியில் முக்கிய இடம் வகிக்கும் ஆயத்த ஆடைகள் துறை கடந்த ஆண்டில் மட்டும் 19 சதவீதம் முதல் 31 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஜவுளி உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் போட்டி நாடுகளுக்கு, பிற உலக நாடுகளுடன் ஏற்படுத்தப்பட்டிருக்கும் வர்த்தக ஒப்பந்தங்கள் காரணமாகவே அவர்கள் இந்தியாவைக் காட்டிலும் முன்னணியில் இருப்பது தெரிய வந்துள்ளது.
 உலகின் ஒட்டு மொத்த ஜவுளி ஏற்றுமதியில் சுமார் 85 சதவீதத்தை 20 நாடுகளே ஏற்றுமதி செய்கின்றன. இதில் இந்தியாவின் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவுக்கு இருந்தாலும் வங்கதேசம், வியத்நாம் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா பின்தங்கியுள்ளது. சீனா, வங்கதேசம், வியத்நாம், கம்போடியா, பாகிஸ்தான், துருக்கி நாடுகள் இந்தியாவுக்கு போட்டி நாடுகளாக உள்ளன.
 வளர்ச்சி குறைவாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் இருப்பதால் வங்கதேசத்துக்கும், கம்போடியாவுக்கும் பல நாடுகளில் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்திருப்பதால், பாகிஸ்தான் ஆடைகள் ஐரோப்பிய நாடுகளில் வரியில்லாமல் விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோலத்தான் அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, சீனா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, இஸ்ரேல், சிலி போன்ற இந்திய ஆடைகள் ஏற்றுமதியாகும் பல நாடுகளிலும், இந்தியாவின் போட்டி நாடுகள் ஏதேனும் ஒரு வரிச் சலுகையைப் பெற்றுள்ளன.
 இந்தியாவுக்கும் போட்டி நாடுகளுக்குமான வரி வித்தியாசம் 1 முதல் 40 சதவீதம் வரை இருக்கும் நிலையில், அவர்களுடன் விலையில் போட்டி போட முடியாத நிலை உள்ளது. எனவே, இந்திய அரசு ஐரோப்பா, ரஷியா, கனடா, வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளுடன் தேவையான வர்த்தக ஒப்பந்தங்களை விரைவாக செய்ய வேண்டும் என்றனர்.
 இதைத் தொடர்ந்து மத்திய அரசின் இணைச் செயலர் கேசவ் சந்திரா பேசும்போது, ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதிக்காக உலக நாடுகளின் வரியில்லா ஒப்பந்தங்கள் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்றும் உறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சியில், ஐ.டி.எஃப். அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com