புதிய கழிப்பறைகள் கட்டவும், பழைய கழிப்பறைகளை மேம்படுத்தவும் ரூ. 211 கோடி நிதி ஒதுக்கீடு

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் புதிய கழிப்பறைகள் கட்டவும், பழைய கழிப்பறைகளை மேம்படுத்தும்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் புதிய கழிப்பறைகள் கட்டவும், பழைய கழிப்பறைகளை மேம்படுத்தும் பணிக்காவும் ரூ. 211 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் அனைத்து மாநகராட்சி தூய்மைப் பணி மேற்பார்வையாளர்கள் சங்கம் முதல் மாநில மாநாடு சங்கத்தின் மாநிலச் செயலாளர் எம்.வீரகொண்டையன் தலைமையில் கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. 
இந்த மாநாட்டைத் தொடக்கிவைத்தும், பட்டியல் இனப் பிரிவினர்கள் கல்வி சம்பந்தமான அரசாணைகள் தொகுப்பு, கையேடு வெளியிட்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
தமிழகத்தில் அனைத்து மக்களும் சுகாதாரமாக வாழ்வதற்கும்,  சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்கவும் திறந்த வெளியில் மலம் கழிக்காமை மற்றும் குப்பைகள் இல்லாத சுற்றுச்சூழல் ஏற்படுத்துவதற்கு தமிழக அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது. 
 நகர்ப்புற உள்ளாட்சிப் பணியாளர்களில் 70 சதவீதம் பேர் துப்புரவுப் பணியாளர்கள் ஆவர். பொது சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் ஆகியவற்றைத் திறம்பட செயல்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். 
துப்புரவுப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணிச் சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
இதற்காக கடந்த 5 ஆண்டுகளில் துப்புரவுப் பணியாளர்களுக்கு என 46 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 1,336 குடியிருப்புகள் கட்ட ரூ. 49.61 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தவிர்க்கும் வகையில் 1,205 புதிய கழிப்பறைகள் கட்டவும், 2,059 பழைய கழிப்பறைகளை மேம்படுத்தும் பணிகளுக்காகவும் ரூ. 211 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
கடந்த 7 ஆண்டுகளில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 12,524 ஊரகப் பகுதிகளில் மொத்தம் ரூ. 2,387 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் ப.காந்திமதி, சட்டப் பேரவை உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன், சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.பாலமுரளி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com