பட்டா வழங்கக் கோரி வீடுகளில் கருப்புக் கொடி: குமாரசாமி காலனி மக்கள் உண்ணாவிரதம்

பட்டா வழங்கக் கோரி வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி பொது மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டா வழங்கக் கோரி வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி பொது மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 கோவை மாநகராட்சி, ஆர்.எஸ்.புரம், 21ஆவது வார்டுக்கு உள்பட்ட குமாரசாமி காலனியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
 முத்தண்ணன்குளம் அருகே நீர்நிலைக்கு பாதிப்பில்லாத வகையில் கடந்த 90 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நாங்கள் தற்போது வசிக்கும் இடத்துக்குப் பட்டா அல்லது அருகாமையில் உள்ள அரசு நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம். 
 இந்நிலையில், திமுக ஆட்சிக் காலத்தில் வீரகேரளத்தில் உள்ள அரசு நிலம் ஒதுக்கீடு செய்ய கடந்த 2010இல் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அதை இன்று வரை நிறைவேற்றவில்லை. 
 அதைத் தொடர்ந்து, தற்போது குடிசை மாற்று வாரியம் மூலமாக எங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், கோவைப்புதூர் மற்றும் மலுமிச்சம்பட்டியில் உள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நகரத்தை விட்டு வெளியேறிச் செல்ல முடியா நிலை உள்ளது.
 2018-19 ஆண்டு தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீர்நிலை அருகே உள்ள தனியார் நிலங்களைக் கையகப்படுத்தி குடியிருக்க நிலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வீரகேரளம், நரசாம்பதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான நிலம் உள்ளது. 
 எனவே, தற்போது நீர்நிலைக்கு பாதிப்பில்லாத வகையில், வசித்து வரும் பகுதியிலேயே தொடர்ந்து குடியிருக்க பட்டா வழங்க வேண்டும் அல்லது அருகில் உள்ள அரசு நிலங்களில் குடியிருக்க வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com