பணியின்போது உயிரிழந்த 414 காவலர்களுக்கு கோவையில் அக்டோபர் 21இல் அஞ்சலி

நாடு முழுவதிலும் கடந்த ஓர் ஆண்டில், பணியின்போது உயிரிழந்த 414 காவலர்களுக்கு கோவையில் மாநகரக் காவல் துறை

நாடு முழுவதிலும் கடந்த ஓர் ஆண்டில், பணியின்போது உயிரிழந்த 414 காவலர்களுக்கு கோவையில் மாநகரக் காவல் துறை சார்பில் அக்டோபர் 21ஆம் தேதி அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. 
இதுகுறித்து, கோவை மாநகரக் காவல் துறை திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: 
சீன ராணுவத்தினர் லடாக் பகுதியில் மறைந்திருந்து 1959 அக்டோபர் 21ஆம் தேதி நடத்திய தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். அவர்களது உயிர்த் தியாகத்தைப் போற்றும் வகையில் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாளாக நாடுமுழுவதிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 
அதன்படி நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், காவல் படைகளின் தலைமை இடங்களிலும் காவல் துறை மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க, வீரமரணம் அடைந்தவர்களின் பெயர்கள் படிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதிலும்  2017ஆம் ஆண்டு செப்டம்பர் 1 முதல் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையிலான ஓர் ஆண்டில் 414 காவலர்கள் பணியின்போது உயிர்த் தியாகம் செய்துள்ளனர். இவர்களது உயிர்த் தியாகத்தை நினைவுகூறும் வகையில் கோவை, காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வீரமரணமடைந்தோர் நினைவிடத்தில் அக்டோபர் 21ஆம் தேதி அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், கோவை மாநகரக் காவல் துறையில் பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினரும் கலந்துகொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com