கோவை மாநகராட்சி தீர்மானங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்: தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் உத்தரவு

கோவை மாநகராட்சி மாமன்றத்தின் தீர்மானங்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என

கோவை மாநகராட்சி மாமன்றத்தின் தீர்மானங்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கோவை மாநகராட்சிக்கு, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் பொலிவுறு நகரம் திட்டம், குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தாலும், இது தொடர்பாக மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் மாநகராட்சியின் இணையதளத்தில் இடம்பெறவில்லை. மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் செய்யும் உரிமையை சூயஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதை அடுத்து அதற்கான தீர்மானம் எப்போது நிறைவேற்றப்பட்டது, அதன் நகல் எங்கே என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்பியிருந்தன.
 இதற்கிடையே, கோவை மாநகராட்சியின் இணையதளத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான மாமன்றத் தீர்மானங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும், இது ஊழலுக்குத் துணைபோகும் செயலாகக் கருத வேண்டியிருப்பதாகவும் கூறி செளரிபாளையத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.பி.தியாகராஜன், சென்னையில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் புகார் தெரிவித்திருந்தார்.
மேலும், இந்த காலகட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தியாகராஜன் கேட்டபோது, அதற்கு அவர் ரூ.18,710 செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறித்தும் அவர் புகார் தெரிவித்திருந்தார்.
 இது தொடர்பாக விசாரணை நடத்திய முறைமன்ற நடுவம், மாநகராட்சி மாமன்றத் தீர்மானங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்ட காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என்றும் எனவே தீர்மானங்களை உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் வழங்காமல் தாமதித்தது, அதிக கட்டணம் கேட்டது போன்ற புகார்களை சம்பந்தப்பட்ட ஆணையத்தில் தெரிவித்து நிவாரணம் பெறலாம் என்று மனுதாரருக்கு முறைமன்ற நடுவத்தின் செயலர் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து மனுதாரர் எஸ்.பி.தியாகராஜன் கூறியதாவது:
மாநகராட்சியின் தீர்மானங்களை இணையதளத்தில் வெளியிடாததில் உள்நோக்கம் உள்ளது. இந்த புகாருக்கு மாநகராட்சி ஏராளமான பதில்களைத் தெரிவித்ததில் இருந்து அது உறுதியாகியிருக்கிறது. புதிய மென்பொருளுடன் இணையதளங்களை ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்றதாலும், சொத்து வரி மறு சீராய்வு தொடர்பான பணிகளை உள்ளீடு செய்து வந்ததாலும், நூறு வார்டுகளுக்கான மறுவரையறைப் பணிகள் நடைபெற்றதாலும், கூடுதலாக 58 வரி வசூல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டதாலும் தீர்மானங்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை என்று அடுக்கடுக்கான காரணங்கள் மாநகராட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டன.
ஆனால் பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, மாநகராட்சியின் பதிலில் உண்மை இல்லை என்பதை அறிந்த முறைமன்ற நடுவம் தற்போது ஒரு நல்ல உத்தரவை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவை ஏற்று, தீர்மானங்களை இணையதளத்தில் வெளியிட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மேல் நடவடிக்கைக்கு வலியுறுத்துவேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com