பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை என புகார்

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத நிலை உள்ளது என நோயாளிகள் நலச்சங்க கூட்டத்தில் புகார் தெரிவித்தனர். 

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத நிலை உள்ளது என நோயாளிகள் நலச்சங்க கூட்டத்தில் புகார் தெரிவித்தனர். 
பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் நோயாளிகள் நலச் சங்கக் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. 
வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமை வகித்தார். 
மருத்துவமனை கண்காணிப்பாளர் கலைச்செல்வி, இருப்பிட மருத்துவ அலுவலர் ராஜா, துணை வட்டாட்சியர் சசிரேகா, அதிமுக நிர்வாகி வாசு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் நலச்சங்க உறுப்பினர்கள் பேசியதாவது:
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மாவட்டத் தலைமை மருத்துவமனையாக இருந்தும் சில பிரிவுகளில் குறைபாடுகள் உள்ளன. அவசரகால சிகிச்சைப் பிரிவில் மதியத்துக்கு மேல் வரும் நோயாளிகள் கோவை உள்ளிட்ட வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றம் செய்ய பரிந்து செய்யப்படுகின்றனர். ரத்த வங்கியில் பகல் 12 மணி வரை மட்டுமே ரத்த தானம் செய்யும் நிலை உள்ளது. 
மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். எனவை கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும். 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்தால் தனியார் ஆம்புலன்ஸ்கள்தான் முதலில் வருகிறது. 
நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்களின் அனுமதியைப் பெறாமலேயே தனியார் மருத்துவமனைக்கு நோயாளிகளைக் கொண்டுசென்று தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பணம் பெறுகின்றனர். 
மருத்துவமனையில் நர்சிங் கல்லூரி கொண்டுவர வேண்டும். பிரேத பரிசோதனைக் கூடத்தை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றனர். 
கூட்டத்தில் நலச் சங்க உறுப்பினர்கள் சார்பில் நிதியும், மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டன.
இதற்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவ அலுவலர் ராஜா ஆகியோர் பதில் அளித்து பேசியதாவது: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. எலும்பு முறிவு பிரிவுக்கு ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளதால் அவருடயை பணி நேரத்தில் மட்டுமே எலும்பு முறிவு சிகிச்சையளிக்கும் நிலை உள்ளது. ரத்த வங்கியிலும் இரு ஊழியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். ஆனால், மகப்பேறு பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு போன்றவை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com