விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: மாநகரில் இன்று போக்குவரத்து மாற்றம்

கோவை மாநகரில் சனிக்கிழமை நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தையொட்டி மாநகரில் இன்று

கோவை மாநகரில் சனிக்கிழமை நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தையொட்டி மாநகரில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.
 இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு:
 கோவை மாநகரில் சனிக்கிழமை (செப்டம்பர் 15) இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, பாரத் சேனா, அனுமன் சேனா, விஷ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த ஊர்வலம் பகல் 1 மணிக்கு குனியமுத்தூர் தர்மராஜா கோயிலில் இருந்து புறப்பட்டு குனியமுத்தூர் பாலக்காடு சாலை வழியாக குனியமுத்தூர் குளத்துக்குச் சென்று அங்கு விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன. இரண்டாவது ஊர்வலம் பகல் 2 மணிக்கு போத்தனூர் சாரதா மில் சாலையில் இருந்து புறப்பட்டு சங்கம் வீதியில் கூடி சுந்தராபுரம் வழியாக பொள்ளாச்சி சாலையில் உள்ள குறிச்சி குளத்துக்குச் சென்று அங்கு சிலைகள் கரைக்கப்படுவதையொட்டி மாநகரில் கீழ்கண்டப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
 விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி பகல் 1 மணி முதல் இரவு 10 மணி வரையில் நகருக்குள் லாரிகள் இயக்க தடைவிதிக்கப்படுகிறது. மேலும் பாலக்காடு சாலையில் இருந்து உக்கடம் நோக்கி வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் கோவைப்புதூர் பிரிவில் இருந்து இடதுபுறம் திரும்பி குளத்துபாளையம் வழியாக ஆஷ்ரம் பள்ளி சந்திப்பு வந்து வலது புறம் திரும்பி புட்டுவிக்கி சாலை வழியாக உக்கடம் வந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.
 பகல் 2 மணியில் இருந்து உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லக்கூடிய வாகனங்கள் குறிச்சி பிரிவில் இருந்து போத்தனூர் கடைவீதி, ரயில்வே கல்யாண மண்டபம், போத்தனூர் புதுப் பாலம், ஜி.டி. டேங்க், செட்டிபாளையம் சாலை வழியாக சென்று ஈச்சனாரி கோயில் அருகே பொள்ளாச்சி சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.
 பொள்ளாச்சி சாலையில் இருந்து சுந்தராபுரம் வழியாக பாலக்காடு சாலை செல்லும் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் பொள்ளாச்சி சாலை மஹாலட்சுமி கோயில் சந்திப்பில் இடது பக்கம் திரும்பி மதுக்கரை மார்கெட் சாலையை அடைந்து பிள்ளையார்புரம் சந்திப்பில் இடது பக்கம் திரும்பி சுகுணாபுரம் வந்து பாலக்காடு சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.
 பொள்ளாச்சி சாலையில் இருந்து சுந்தராபுரம் வழியாக உக்கடம் செல்லும் வாகனங்கள் ஈச்சனாரி பிரிவில் இருந்து வலது பக்கம் திரும்பி ஈச்சனாரி செட்டிபாளையம் சாலையை அடைந்து இடது பக்கம் திரும்பி ஜி.டி.டேங்க், போத்தனூர் புதுப்பாலம் வழியாக போத்தனூர் கடைவீதி, குறிச்சி பிரிவு வந்து ஆத்துப்பாலம் வழியாக உக்கடம் செல்ல வேண்டும்.
 பொள்ளாச்சியில் இருந்து கோவை மார்க்கமாக வரும் அனைத்து கனரக வாகனங்களும் நகருக்குள் நுழைய அனுமதி இல்லை. அவை அனைத்தும் எல் அண்டு டி பைபாஸ் சாலையில் தான் செல்ல வேண்டும். 
மேலும் விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதையில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை பாதையில் நிறுத்தாமல் தவிர்த்து போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com