கோவை மாநகரில் 159 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

கோவை மாநகரில் பொதுமக்களின் வழிபாட்டுக்காக பல்வேறு அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 159 சிலைகள் ஊர்வலமாக


கோவை மாநகரில் பொதுமக்களின் வழிபாட்டுக்காக பல்வேறு அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 159 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சனிக்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை மாநகரில் இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, பாரத் சேனா, பாஜக, அனுமன் சேனா, விஸ்வ ஹிந்து பரிஷத், விவேகானந்தர் பேரவை, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் 394 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இந்த சிலைகள் கடந்த வியாழக்கிழமை முதல் பல்வேறு கட்டங்களாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகரில் 159 விநாயர் சிலைகள் பலத்த பாதுகாப்புடன் சனிக்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டன. இதில், குறிச்சி குளம்-69, குனியமுத்தூர்-33,சிங்காநல்லூர்-33, வெள்ளக்கிணறு-12, சூலூர்-2, முத்தண்ணன் குளம்-5, வாளையாறு அணை-2 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை ஒட்டி குனியமுத்தூர், சுந்தராபுரம், ஆத்துப்பாலம், பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும், விநாயகர் சிலைகள் ஊர்வலத்துக்கு காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேட்டுப்பாளையத்தில்...: கோவை புறநகர் காவல் எல்லைக்கு உள்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 290 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இதில், வெள்ளிக்கிழமை 34 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை 256 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டன.
அதே போல், மதுக்கரை, க.க.சாவடி, நவக்கரை, எட்டிமடை, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகளும் ஊர்வலகமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
252 விநாயகர் சிலைகள்
ஆழியாற்றில் விசர்ஜனம்: பொள்ளாச்சி, ஆûற்னமலை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் இருந்து 252 விநாயகர் சிலைகள் ஆழியாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொள்ளாச்சி, நெகமம், கோமங்கலம், கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இந்து முன்னனி சார்பாக 137 சிலைகள், விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக 10 சிலைகள், பாஜக சார்பாக 1 சிலை, அனுமன்சேனா சார்பாக 7 சிலைகள், உலக நல வேள்விக்குழு சார்பாக 3 சிலைகள், பொதுமக்கள் சார்பாக 127 சிலைகள் வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் சார்பாக 168 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆனைமலை பகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் வைக்கப்பட்ட 34 விநாயகர் சிலைகள் வெள்ளிக்கிழமை இரவு ஆழியாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன்சம்பத், கோவை தெற்கு மாவட்டத் தலைவர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
பொள்ளாச்சி பகுதியில் பொதுமக்கள் உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 90 விநாயகர் சிலைகள் அம்பராம்பாளையம் பகுதி ஆழியாற்றில் சனிக்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டன. கிணத்துக்கடவு பகுதியில் வைக்கப்பட்டிருந்த 28 சிலைகள் ஆழியாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
ஆனைமலை, மயிலாடுதுறை பகுதிகளில் 100 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டதால் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஒருவர் மாயம்: கிணத்துக்கடவு பகுதியில் இருந்து விநாயகர் சிலை விசர்ஜனம் செய்ய அம்பராம்பாளையம் பகுதிக்கு வந்த பாலகிருஷ்ணன்(23) என்ற இளைஞர் ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டதால் போலீஸாரும், தீயணைப்பு துறையினரும் பாலகிருஷ்ணனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
228 சிலைகள் நாளை விசர்ஜனம்: மாநகரில் போக்குவரத்து மாற்றம்
அதே போல், கோவை மாநகரில் வைக்கப்பட்டுள்ள 228 சிலைகள் திங்கள்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட உள்ளன. திங்கள்கிழமை (செப்டம்பர் 17) காலை 10 முதல் இரவு 11 மணி வரையில் மாநகரில் போக்குவரத்து கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:
உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பேரூர் செல்லும் அனைத்து வாகனங்களும் பேரூர் புறவழிச்சாலை, செல்வபுரம் சிவாலயா திரையரங்கம் சந்திப்பு வழியாக பேரூர், தடாகம் சாலையைச் சென்றடையலாம்.
காந்திபுரம் மற்றும் டவுன்ஹாலில் இருந்து வைசியாள் வீதி, சலிவன் வீதி செல்லும் வாகனங்கள் உக்கடம் காவல் நிலையத்தில் இருந்து வலது புறம் திரும்பி புறவழிச்சாலை வழியாக பேரூர், தடாகம் சாலையைச் சென்றடையலாம். உக்கடம் வழியாக திருச்சி செல்லும் அனைத்து வாகனங்களும் சுங்கம் புறவழிச்சாலை வழியாகச் செல்லவேண்டி இடங்களுக்குச் சென்றடையலாம். உக்கடம் வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, ரயில் நிலையம் வழியாக காந்திபுரம் செல்லலாம். தடாகம் சாலையில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் வெங்கட்டாபுரம் சந்திப்பில் இடது புறம் திரும்பி என்.எஸ்.ஆர்.சாலை வழியாக மேட்டுப்பாளையம் சாலை, ஏ.ஆர்.சி.சந்திப்பு சென்று சிவானந்தா காலனி வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம். அதே போல், மேட்டுப்பாளையத்தில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் சங்கனூர் பாலம் சந்திப்பில் இடது புறம் திரும்பி கணபதி,காந்திபுரம் வழியாகச் செல்ல வேண்டும். மேட்டுப்பாளையத்தில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் விநாயகர் ஊர்வலம் வடகோவை மேம்பாலத்தைக் கடந்து சென்ட்ரல் திரையரங்கம் சென்றடைந்த பிறகே வடகோவை மேம்பாலம் வழியாக காந்திபுரம் செல்ல வேண்டும்.
பேரூரில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து பேருந்துகள் மற்றும் வாகனங்கள் பேரூர் சாலை, செல்வபுரம் மேல்நிலைப்பள்ளி அருகில் வலது பக்கம் திரும்பி பேரூர் புறவழிச்சாலை வழியாக உக்கடம் செல்லலாம்.
மாநகரில் லாரிகள் இயக்கத் தடை ...: விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு பொதுமக்களின் நலன் கருதி திங்கள்கிழமை காலை 8 முதல் இரவு 10 மணி வரையில் நகருக்குள் லாரிகள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் ஊர்வலப் பாதையில் இருக்கும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை போக்குவரத்து இடையூறு இல்லாமல் நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்
பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com