மத நல்லிணக்கம் நம் முன்னோர்களின் சொத்து: பேரூர் ஆதீனம்

மத நல்லிணக்கம்தான் நம் முன்னோர்களின் சொத்து என்று பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேசினார். இந்திய கலாசார நட்புறவுக்

மத நல்லிணக்கம்தான் நம் முன்னோர்களின் சொத்து என்று பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேசினார்.
இந்திய கலாசார நட்புறவுக் கழகத்தின் மாவட்ட மாநாடு மற்றும் மத நல்லிணக்க கருத்தரங்கம் கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய கலாசார நட்புறவுக் கழகத்தின் மாவட்டத் தலைவர் வே.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் அறிமுகஉரையும், மாவட்டப் பொருளாளர் எம்.வி.ராஜன் வரவேற்புரையும் நிகழ்த்தினர்.
இதில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேசுகையில், மத நல்லிணக்கம் என்பது நம் முன்னோர்களின் சொத்தாகும். அதைத்தான் இப்போது நாம் முன்னெடுத்துச் செல்கிறோம்.
சங்க இலக்கியத்தில் நல்லிணக்கம் பேசப்பட்டுள்ளது. அது மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. திருமுருகாற்றுப் படையில் நல்லிணக்கம் பேசப்பட்டுள்ளது. கணியன் பூங்குன்றன், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிறார். வள்ளுவன் பிறப்பொக்கும் எல்லா உயிர்கட்கும் என்கிறார்.
எல்லா உயிர்களுக்கும் சம உரிமை என்பதை வள்ளுவனே பேசி உள்ளார். எனவே, மத நல்லிணக்கம் என்பது மட்டுமல்ல எல்லா உயிர்களும் சமம் என்பது நமது பார்வை என்றார்.
இதில் புலியகுளம் அந்தோணியார் திருத்தலத்தின் பங்குத்தந்தை எம்.ஜார்ஜ் தனசேகர் பேசும்போது, மத நல்லிணக்கம் ஆங்காங்கே மலர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்றார்.
பலசமய நல்லுறவு இயக்கத் தலைவர் ஹாஜி ஜெ.முகமது ரஃபிக் பேசுகையில், இஸ்லாம் என்றாலே அமைதி என்றுதான் பொருள். நபிகள் நாயகம் 450 ஆண்டுகளுக்கு முன்னர் இறைவன் கட்டளையின்படி வாழ்ந்து காட்டிவிட்டு போனார். மண்ணில் உள்ளவர்கள் மீது இரக்கம் காட்டினால் விண்ணில் உள்ளவன் உன் மீது இரக்கம் காட்டுவார் என்பதுதான் இஸ்லாம் மார்க்கத்தின் சாரம். எனவே, ஒருசிலர் செய்கிற தவறுகளுக்கு ஒட்டுமொத்த இஸ்லாம் மதத்தின் மீது பழிசுமத்தக்கூடாது என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com