டெங்கு: தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெறலாம்- அமைச்சர்

முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு இலவசமாக சிகிச்சை

முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
 ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெங்கு காய்ச்சல் குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். மருத்துவமனையில் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
 தமிழகத்தில் டெங்கு முழு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. அனைத்து விதமான காய்ச்சல்களும் டெங்கு என்று தவறாகக் கருதி வருகின்றனர். காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வருபவர்களில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே டெங்கு பாதிப்பு உள்ளது.
 ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினரின் தொடர் நடவடிக்கையால் டெங்கு கட்டுக்குள் உள்ளது. டெங்கு பாதிப்பால் 100 சதவீதம் உயிரிழப்புத் தடுக்கும் வகையில் மருத்துவர்கள், செவிலியருக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் 5 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் 90 மையங்களில் எலிசா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் டெங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்படும் நோயாளிகளின் நிலைமை சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் மூலமாக தினந்தோறும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு அங்கீகரிக்கப்பட்ட 870 தனியார் மருத்துவமனைகளில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
 ஆய்வின்போது, முன்னாள் அமைச்சர் கே.வி.இராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர்,  ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com