புத்தகத் திருவிழாவில் குவிந்த பழங்குடி குழந்தைகள்

ஈரோடு புத்தகத் திருவிழாவைக் காண பர்கூர், கடம்பூர் மலைப் பகுதியில் இருந்து பழங்குடியின மாணவ, மாணவிகள் சனிக்கிழமை வந்தனர்.

ஈரோடு புத்தகத் திருவிழாவைக் காண பர்கூர், கடம்பூர் மலைப் பகுதியில் இருந்து பழங்குடியின மாணவ, மாணவிகள் சனிக்கிழமை வந்தனர்.
ஈரோடு மாவட்டம், பர்கூர், கடம்பூர், சத்தி மலைப் பகுதிகளில் சோளகர், ஊராலி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இதில், பெரும்பாலானோர் இதுவரை பேருந்துகள், ரயில்களை பார்த்தது இல்லை. மாவட்டத் தலைநகரான ஈரோடு நகரையே பார்த்தது இல்லை.
பர்கூர் மலைப் பகுதியில் கொங்காடை, கடம்பூர் மலைப்பகுதி, குன்றி, விளாங்கோம்பை, அக்னிபாவி, ஜி.என்.தொட்டி, சுண்டைபோடு, பேடுலோலா, நாயகன்தொட்டி, அணில்நத்தம், பண்ணையத்தூர் ஆகிய 8 கிராமங்களில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
கரும்பு வெட்டுதல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடும் சிறுவர்களை சுடர் தொண்டு நிறுவனம் மீட்டு இப்பள்ளிகளில் சேர்த்து படிக்கவைத்து வருகிறது. இங்கு பயிலும் 6 முதல் 8-ஆம் வகுப்பு
வரையிலான மாணவ, மாணவிகள் 30 பேரை சுடர் தொண்டு நிறுவனம் சார்பில் ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு சனிக்கிழமை அழைத்துவரப்பட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக புத்தக அரங்குகளைப் பார்வையிட்டனர். பின்னர், அவர்களுக்கு புத்தகம், புத்தகத் திருவிழாவின் சிறப்புகள் குறித்து மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் விளக்கினார். மேலும், அக்குழந்தைகளுக்கு இலவசமாக புத்தகங்களையும் வழங்கினார்.
இதுகுறித்து, சுடர் தொண்டு நிறுவனத் தலைவர் எஸ்.சி.நடராஜ் கூறுகையில், இங்கு வந்துள்ள பழங்குடி குழந்தைகள் இதுவரை பாடப் புத்தகங்களை மட்டுமே பார்த்துள்ளனர். நூலகம் என்றால் என்ன என்பது இவர்களுக்குத் தெரியாது. அதேபோல, புத்தகத் திருவிழாவை முதல் முறையாகப் பார்த்தனர். இவர்களுக்கு புத்தகம் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் இப்போது ஏற்பட்டுள்ளது என்றார்.
புத்தகத் திருவிழாவில் இன்று...
ஈரோடு, ஆக. 12: ஈரோடு புத்தகத் திருவிழாவில் 10-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் நடைபெறும் சிந்தனை அரங்கில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் 'சிந்தித்த வேளையில்' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.
'மண்ணும், மொழியும்' எனும் தலைப்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், 'நீர்' எனும் தலைப்பில் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு, கொங்கு வேளாளர் தொழில்நுட்பக் கல்லூரி அறக்கட்டளைத் தாளாளர் ஏ.பரமேஸ்வரி லிங்கமூர்த்தி தலைமை வகிக்கிறார். கொங்கு பொறியியல் கல்லூரித் தாளாளர் ஏ.வெங்கடாசலம் முன்னிலை வகிக்கிறார். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுக உரையாற்றுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com