வலிமை, ஆளுமை, பொறுப்பு உடையவர்களுக்கு மட்டுமே ஆளும் வாய்ப்பை வழங்க வேண்டும்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி

வலிமை, ஆளுமை, பொறுப்பு உடையவர்களுக்கு மட்டுமே ஆளும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கோ.பாலச்சந்தர் பேசினார்.

வலிமை, ஆளுமை, பொறுப்பு உடையவர்களுக்கு மட்டுமே ஆளும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கோ.பாலச்சந்தர் பேசினார்.
ஈரோடு புத்தகத் திருவிழாவில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற சிந்தனை அரங்கில் 'தமிழர் வாழ்வில் சினிமா' எனும் தலைப்பில் அவர் பேசியதாவது:
சினிமா என்பது கலையின் வடிவம். சினிமா எனும் ஊடகத்தை திராவிடக் கட்சிகள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டன. சினிமாவை அரசியலுக்கு முதலில் பயன்படுத்தியது காங்கிரஸ் கட்சிதான். சுதந்திரப் போராட்டத்தின்போது காங்கிரஸ் கட்சியின் கருத்துகளை சினிமாவில் காங்கிரஸ்காரரான சத்தியமூர்த்தி பயன்படுத்தினார்.
கே.பி.சுந்தராம்பாள் பாடல்களில் காங்கிரஸ் தனது கருத்துகளை முழுமையாகப் பயன்படுத்தியது. ராஜாஜி, காமராஜர் ஆகியோர் சினிமாவைப் பயன்படுத்த தவறிவிட்டனர். இடதுசாரிகளும் பெரிய அளவில் பயன்படுத்தவில்லை. தேசியவாதியான எம்.ஜி.ஆர். கூட திராவிடக் கட்சிக்குப் போகும் நிலை உருவானது. மலைக்கள்ளன் படம் எம்ஜிஆருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக மாறியது. எம்ஜிஆர் இயற்கையாகவே மனிதநேயம் மிக்கவராகவும், கொடை வள்ளலாகவும் வாழ்ந்தார்.
நடிப்பின் முழுப் பரிமாணத்தை அடைவதையே இலக்காக வைத்து செயல்பட்டார். ஆனால், தனது பிம்பத்தை சினிமா என்ற ஊடகம் மூலம் சமுதாயத்தில் கட்டமைத்தார் எம்ஜிஆர். காமராஜர், ஓமந்தூரார் போலவே ஏழைகள் மீது அக்கறை கொண்டவராகவே எம்ஜிஆர் இருந்தார்.
நேர்மையான அரசை அமைக்க எம்ஜிஆர் முயற்சி செய்தார். இன்றைய காலகட்டத்தில் ரஜினி, கமல் போன்றவர்கள் அரசியலுக்கு வர முயற்சி செய்வதாக தகவல்கள் வருகின்றன. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், அவர்கள் தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகளான காவிரி, முல்லைப் பெரியாறு போன்றவற்றில் இவர்களின் கருத்துகள் என்ன என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
தமிழகத்தில் ஆள யாரும் நினைக்கலாம். ஆனால், யார் நம்மை ஆள வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஆழமான, அழுத்தமான சிந்தனை, தமிழ் உணர்வு உள்ளவர்கள்தான் தலைமைப் பதவிக்கு வர வேண்டும். வலிமை, பொறுப்பு, ஆளுமை உள்ளவர்களிடம் ஆளும் வாய்ப்பை மக்கள் வழங்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து, மாநில அளவிலான கவிதைப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்த வேளாளர் மகளிர் கலைக் கல்லூரி, ஆங்கில இலக்கியத் துறை பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவி நவீனாவுக்கு ரூ. 3,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
இதில், வேளாளர் கல்விக் குழுமங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், சிகரம் கட்டுமான நிறுவன நிர்வாக இயக்குநர் ஆர்.சிவலிங்கம், யெஸ் அன்ட் யெஸ் கட்டுமான நிறுவன நிர்வாக இயக்குநர் டி.சண்முகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com