பவானி ஆற்றில் சாயக் கழிவுநீர் கலப்பது தடுத்து நிறுத்தம்

தொட்டம்பாளையம் பவானிஆற்றில் திறந்துவிடப்பட்ட சாயப் பட்டறை கழிவுநீர் தற்போது மாற்று வழியில் மறுசுழற்சிக்கு திருப்பி விடப்பட்டதால் ஆற்றில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டது.

தொட்டம்பாளையம் பவானிஆற்றில் திறந்துவிடப்பட்ட சாயப் பட்டறை கழிவுநீர் தற்போது மாற்று வழியில் மறுசுழற்சிக்கு திருப்பி விடப்பட்டதால் ஆற்றில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டது.
சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் தொட்டம்பாளையத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.  இந்த ஊரையொட்டி பவானி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றுநீர் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீராகச் செல்கிறது.
இப்பகுதி மக்களின் பிரதான தொழிலே நெசவுத் தொழிலாகும். தற்போது கோரா பட்டு சேலைதான் அதிகம் தயாரிக்கின்றனர். அவைகளுக்குத் தேவையான வண்ணத்தில் சாயம் போட்டுத் தர அதே பகுதியில் சிலர் சாயப் பட்டறைகள் வைத்து நடத்தி கின்றனர்.
பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் சாயக் கழிவுநீரை வடிகாலில் திறந்து விடுவார்கள் என்றும், அக்கழிவுநீர் விடிவதற்குள் பவானி ஆற்றில் கலந்து விடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக மாலை 4 மணி அளவில் பவானி ஆற்றுப்பாலம் அருகே செல்லும் வடிகால் வழியாக பவானிஆற்றில் சாயப் பட்டறைக் கழிவுநீர் கலந்ததைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, அரசு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, சாயப் பட்டறைக் கழிவுகள் பவானி ஆற்றில் கலந்ததை உறுதி செய்தனர்.
இதைத் தொடர்ந்து, சில நாள்களாக சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து, கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றத் தடை விதித்தும், தொடர்ந்து சாயபட்டறை இயங்கக் கூடாது எனவும் உத்தரவிட்டனர்.  
இதையடுத்து, கழிவுநீரைத் திறந்துவிட்ட சம்பந்தப்பட்ட சாயப் பட்டறை உரிமையாளர் தனது சொந்த செலவில் டேங்கர் லாரியில் தண்ணீரை விலைக்கு வாங்கி வந்து வடிகாலை சுத்தம் செய்துள்ளார்.
மேலும், அங்கு தேங்கி நின்ற சாயக் கழிவுநீரை ஆற்றுத் தண்ணீரில் சென்று கலக்கவிடாமல் கரைப் பகுதியில் உள்ள குழிக்குள் திருப்பிவிட்டனர். இதனை மறுசுழற்சி செய்யும பணியும் நடைபெற்று வருகிறது. இதனால், பவானி ஆற்றுநீர் மேலும் மாசுபடாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com