தூக்கநாயக்கன்பாளையம் வனச் சரகத்தில் வன விலங்கு கணக்கெடுக்கும் பணி நிறைவு

கோபி அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உள்பட்ட 10 காவல் சுற்றுகளிலும் வனவிலங்கு கணக்கெடுக்கும்

கோபி அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உள்பட்ட 10 காவல் சுற்றுகளிலும் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது. இந்தப் பணியில் 40-க்கும் மேற்பட்ட வனத் துறை ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு  உள்பட்ட வனப் பகுதியில் கடந்த 19-ஆ ம் தேதி முதல் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோபி அருகிலுள்ள தூக்கநாயக்கன்பாளையம் வனசரகத்துக்கு உள்பட்ட கணக்கம்பாளையம்,  பங்களாபுதூர்,  கொங்கர்பாளையம்,  கடம்பூர்,  கிழக்கு குன்றி,  கூத்தம்பாளையம் உள்ளிட்ட 10 காவல் சுற்றுகளிலும், வனச்சரகர் மனோஜ்குமார் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டன.  ஒவ்வொரு குழுவிலும், வனக்காப்பாளர்,  வனக்காவலர்,  வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அடங்கிய தலா 4 பேர் இடம்பெற்றனர். இக்குழுவினர்  கடந்த 19-ஆம் தேதி முதல் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் ஊண் உண்ணிகள் கணக்கெடுப்பு, நேர்கோட்டுப் பாதை கணக்கெடுப்பு, வார உண்ணிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.  கணக்கெடுப்பின் இறுதிநாளான செவ்வாய்க்கிழமை கணக்கம்பாளையம், நவக்கிணறு மாதையன் கோயில் வனப் பகுதியில் வனக்காப்பாளர் பழனிசாமி, வனக்காவலர் சீனிவாசன், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மணிகண்டன், ராமகிருஷ்ணன் ஆகியோர் நேர்கோட்டுப் பாதை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் வனப்பகுதியினுள் நேர்பாதையில் சுமார் 4 கி.மீ. தூரம் சென்று, பார்வையில் படும் விலங்கினங்களையும், விலங்கினங்களின் எச்சம் ஆகியவற்றையும் கணக்கெடுப்பு செய்தனர்.
கணக்கெடுக்கும் பணியின் நிறைவு அறிக்கைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து மாவட்ட வனத் துறை அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளனர்.  கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு  புலிகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதாகவும்,  சிறுத்தை, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகரித்துள்ளதாகவும் வனத் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com