பர்கூர் மலைப் பகுதி பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி உண்ணாவிரதம்

பர்கூர் மலைப் பகுதியில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி மாணவர்கள்

பர்கூர் மலைப் பகுதியில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பர்கூர் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் வி.பி.குணசேகரன் தலைமை வகித்தார்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் மலைப் பகுதிகளில் தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் ஈரோடு மாவட்ட மலைக் கிராமங்களில் 21 பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையாகவே உள்ளது.
பர்கூரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 125 மாணவ, மாணவியருக்கு ஒரே ஆசிரியரும்,  உயர்நிலைப் பள்ளியில் 253 பேருக்கு நான்கு ஆசிரியர்களும்,  குட்டையூர் நடுநிலைப் பள்ளியில் 53 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியரும்,  கொங்காடையில் 226 குழந்தைகளுக்கு மூன்று ஆசிரியர்களும்,  கத்திரிமலையில் 55 பேருக்கு ஒரு ஆசிரியரும்,  சோளகனையில் 120 பேருக்கு மூன்று ஆசிரியர்களும் மட்டுமே உள்ளனர்.
ஆசிரியர் பற்றாக்குறை பழங்குடியின குழந்தைகளின் கல்வித்தரத்தை கடுமையாக பாதிக்கும். பலமுறை மனு அளித்தும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் இணைந்து இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர். தொடர்ந்து, வகுப்பு புறக்கணிப்பு மற்றும் பள்ளிக்கு பூட்டுபோடும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதில்,  அதிமுக கிளைச் செயலர் முருகன்,  திமுக ஊராட்சி செயலர் ராமதாஸ்,  தேமுதிக ஒன்றியச் செயலர் ராஜா சம்பத்,  பாஜக நிர்வாகி சண்முகம்,  தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாவட்ட அமைப்பாளர் எஸ்.மோகன்குமார்,  சுடர் தொண்டு நிறுவன இயக்குநர் எஸ்.சி.நடராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com