பல்கலைக்கழக தினக்கூலி பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் வழங்க வேண்டும்: பல்கலை. ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

பாரதியார், பெரியார் பல்கலைக்கழகங்களில் தினக்கூலி பணியாளர்களுக்குத் தொகுப்பூதியம் வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பாரதியார், பெரியார் பல்கலைக்கழகங்களில் தினக்கூலி பணியாளர்களுக்குத் தொகுப்பூதியம் வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
 இதுகுறித்து இச்சங்கத்தின் நான்காம் மண்டலத் தலைவர் ப.கமலக்கண்ணன், செயலர் என்.ராஜேந்திரன் ஆகியோர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 கடந்த 19 ஆண்டுகளாக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசுக் கல்லூரியாக தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். இக்கல்லூரிக்கு தனியாக முகமை இல்லாததால், இக்கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை.
 கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர், தருமபுரி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பணிநிலை தொடர்பான நீண்டநாள் நிலுவையில் உள்ள கோப்புகளின் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 மாணவர் சேர்க்கையில் விதிகளை மீறியும், கல்விக் கட்டணம் கொள்ளையடிப்பதையும், கட்டாய நன்கொடை பெறுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ள தனியார் கல்லூரிகளின் போக்கு கண்டிக்கத்தக்கது.
 பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம், ஆசிரியர்கள் மீது தொடுத்துள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். பெரியார், பாரதியார் பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக பணியாற்றும்
தினக்கூலிப் பணியாளர்களைத் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யவும், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அலுவலகப் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக நியமனம் செய்யவும் துணைவேந்தர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 குமாரபாளையம் ஜே.கே.கே.என். கலை, அறிவியல் கல்லூரி நிர்வாகம் அரசு விதிகளின்படி பணிமூப்பில் உள்ள மூத்த பேராசிரியரை கல்லூரி முதல்வர் பொறுப்பில் நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com