கேரள அரசு தடுப்பணை கட்டுவதைத் தடுக்க தடையாணை பெற தமிழக அரசு தவறிவிட்டது: பவானி தடுப்பணை தடுப்புக்குழு புகார்

கேரள அரசு தடுப்பணை கட்டுவதைத் தடுக்க உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெறுவதற்கு தமிழக அரசு தவறிவிட்டது என்று பவானி தடுப்பணை தடுப்புக்குழு புகார்


கேரள அரசு தடுப்பணை கட்டுவதைத் தடுக்க உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெறுவதற்கு தமிழக அரசு தவறிவிட்டது என்று பவானி தடுப்பணை தடுப்புக்குழு புகார்தெரிவித்துள்ளது.
பவானி தடுப்பணை தடுப்புக்குழு சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. கீழ்பவானி முறைநீர் பாசன சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் காசியண்ணன் தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கு.ராமகிருஷ்ணன், கூட்டமைப்புச் செயலாளர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஒருங்கிணைப்பாளர் கி.வே.பொன்னையன் கூறியதாவது:
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டி வருவதைத் தடுக்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நிலையில் இவ்வழக்கு கடந்த பிப்ரவரி 7, மார்ச் 21-ஆம் தேதிகளில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் பவானி ஆற்றில் கேரள அரசு தடுப்பணை கட்டுவதைத் தடுக்க, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சரியான அழுத்தம் தர தவறிவிட்டது.
மேலும் தடுப்பணை கட்டுவதை மத்திய அரசும் தடுக்க தவறிவிட்டது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் முறையான அழுத்தம் கொடுத்து தடுப்பாணை பெற தவறிய மத்திய, மாநில அரசுகளின் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது ஆகும்.
குறிப்பாக இவ்வழக்கில் தமிழக அரசு சார்பில் கேரளம், கர்நாடகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்களே ஆஜராகினர். பிற மாநிலத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்களைக் கொண்டு வழக்கு விசாரணை நடப்பதால் தமிழகத்தின் நலன் பாதிக்கப்பட்டுள்ளதாகவே பவானி தடுப்பணை தடுப்புக்குழு கருதுகிறது.
பவானி ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உச்சநீதிமன்றத்தில் முறையான தடையாணை பெற தவறிய தமிழக அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்தும் மார்ச் 30-ஆம் தேதி ஏற்கெனவே திட்டமிட்டபடி 15 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றார்.
இதில், மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் கண.குறிஞ்சி, கணியன் பாலன், முருங்கத்தொழுவு ஊராட்சி முன்னாள் தலைவர் ரவி, ஆர்.பி.சண்முகம், திருநாவுக்கரசு, த.பெ.திக., மாவட்டச் செயலாளர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com