கர்நாடகத்துக்கு மணல் கடத்த முயன்ற 3 லாரிகள் பறிமுதல்

கர்நாடகத்துக்கு மணல் கடத்த முயன்றதாக 3 லாரிகளை வருவாய்த் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.

கர்நாடகத்துக்கு மணல் கடத்த முயன்றதாக 3 லாரிகளை வருவாய்த் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
 தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஈரோடு வழியாக கர்நாடக மாநிலத்துக்கு மணல் கடத்தப்படுவதாக ஈரோடு கனிம வளத்துறை அதிகாரிகளுக்குப் புகார் வந்தது. அதைத்தொடர்ந்து, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட புள்ளியியல், சுரங்கத் துறை அதிகாரிகளுக்கு, கனிம வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
 அதன்பேரில், மாவட்ட புள்ளியியல், சுரங்கத் துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களாக ஈரோடு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 இந்நிலையில், திருச்சி அருகே உள்ள தொட்டியத்தில் இருந்து மணல் ஏற்றிக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை வந்த ஒரு லாரியை, சோலார் பகுதியில் ஈரோடு மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தடுத்து நிறுத்தி, காசிபாளையம் கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் தெரிவித்தனர்.
 அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற கிராம நிர்வாக அலுவலர் விசாரணை நடத்தியதில், உரிய ஆவணங்கள் இன்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு மணலுடன் லாரி கொண்டு செல்லப்பட்டது.
 இதுதொடர்பாக வருவாய்க் கோட்டாட்சியர் உயர் விசாரணை நடத்தி வருகிறார். இதேபோல, உரிய ஆவணங்கள் இன்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகளை வருவாய்த் துறையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். கடந்த சில தினங்களில் மட்டும் உரிய ஆவணங்கள் இன்றி மணல் ஏற்றி வந்ததாக 7 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com