சாலை பராமரிப்புப் பணியைத் தனியாருக்கு தாரைவார்ப்பதால் ஊழல் அதிகரிக்கும்: சாலை ஆய்வாளர் சங்க பொதுச் செயலர்

சாலை பராமரிப்புப் பணியை தனியாருக்கு தாரைவார்ப்பதால் ஊழல் அதிகரித்துள்ளது என்று தமிழ்நாடு சாலை ஆய்வாளர் சங்க மாநிலப் பொதுச் செயலர் மு.மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

சாலை பராமரிப்புப் பணியை தனியாருக்கு தாரைவார்ப்பதால் ஊழல் அதிகரித்துள்ளது என்று தமிழ்நாடு சாலை ஆய்வாளர் சங்க மாநிலப் பொதுச் செயலர் மு.மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
 ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:
 தமிழகத்தில் 2013-இல் முதல்முறையாக திருவள்ளூர் கோட்டத்துக்கு உள்பட்ட சாலைகள் தனியார் பராமரிப்பு பணிக்கு ரூ. 640 கோடிக்கு விடப்பட்டன. அதற்குப் பின்னர் பொள்ளாச்சி கோட்ட சாலைகள் ரூ. 275 கோடிக்கும், கிருஷ்ணகிரி கோட்ட சாலைகள் ரூ. 441 கோடிக்கும், ராமநாதபுரம் கோட்ட சாலைகள் ரூ. 441 கோடிக்கும் விடப்பட்டுள்ளது. விரைவில் விருதுநகர் கோட்டச் சாலைகளும் ரூ. 960 கோடிக்கு விடப்படவுள்ளன. இதுபோன்ற பணிகள் தனியாருக்கு தாரை வார்ப்பதால் கோடிக்கணக்கில் ஊழல் அதிகரித்து வருகிறது.
 அரசு வசம் பராமரிப்புப் பணிகள் இருக்கும்போது 8 கி.மீ. தூர சாலையை 2 சாலைப் பணியாளர், ஒரு சாலை ஆய்வாளர் பராமரிப்பு செய்வார்கள். இதன் மூலமாக ஆண்டுக்குப் பணியாளர் ஊதியம், பராமரிப்பு பொருள் செலவு என ரூ. 50 லட்சம்தான் அரசுக்கு செலவு வந்தது. ஆனால், தனியார் வசம் விடப்பட்டதால் 8 கி.மீ. தூரத்துக்கு பல கோடி செலவாகிறது.
 முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சாலை பராமரிப்பில் ஊழல் மேலும் அதிகரித்துவிட்டது. சாலை நடு கோடுகள், சாலையில் ஒளிரும் வில்லைகள் ஒட்டுதல்,  எல்லைகள், எச்சரிக்கைப் பலகைகள் வைத்தல் உள்ளிட்டவை திமுக, அதிமுக ஆட்சியில் ஒரே நபருக்கு மட்டும்தான் ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. இதிலும் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெறுகிறது. இதுகுறித்து முதல்வர், அரசு உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
 பேட்டியின்போது, மாநிலத் தலைவர் எஸ்.வி.ஏகநாதன், துணைத் தலைவர் பூபால சிங்கம், மாநிலச் செயலர்கள் சி.குருசாமி, எஸ்.காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com