பவானிசாகர் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமிப்பு விவசாய பம்ப்செட்டுகள் அகற்றம்

பவானிசாகர் நீர்ப்பிடிப்புப் பகுதியான மாயாற்றில் முறைகேடாக தண்ணீர் எடுக்கும் விவசாயிகளின் ஆயில் என்ஜின் பம்ப்செட்டுகளை பொதுப் பணித் துறையினர் ஞாயிற்றுக்கிழமை அகற்றினர்.

பவானிசாகர் நீர்ப்பிடிப்புப் பகுதியான மாயாற்றில் முறைகேடாக தண்ணீர் எடுக்கும் விவசாயிகளின் ஆயில் என்ஜின் பம்ப்செட்டுகளை பொதுப் பணித் துறையினர் ஞாயிற்றுக்கிழமை அகற்றினர்.
 பவானிசாகர் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான பூதிகுப்பை, வெல்லமொக்கை, கெம்பாறை, சுஜில்குட்டை, காரமொக்கை ஆகிய பகுதியில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசிக்கின்றனர். மீன்பிடிப்பு இவர்களது முக்கியத் தொழிலாக உள்ளது. தற்போது அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி வறண்டு காணப்படுவதாலும், மீன் இல்லாததாலும் மீனவர்கள் மாயாற்றுப் படுகையில் தட்டப்பயறு, வெங்காயம், வெள்ளைப்பூசணி, வாழை, கத்திரிக்காய் போன்ற விவசாயப் பயிர்களை சாகுபடி செய்தனர்.
 பவானிசாகரில் நீர்மட்டம் 40 அடியாக உள்ளதால் வரும் மாதத்தில் அணையின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதனால், ஈரோடு மாவட்டத்தில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் நீர்இருப்பை சீராக வைத்திருக்க மாவட்ட நிர்வாகம் முடிவுசெய்தது. இதையடுத்து, அணைக்கு வரும் மாயாற்று நீரை பாதியிலேயே உறிஞ்சி எடுத்து நீர் வரத்தை தடுக்கும் விவசாய ஆயில் பம்ப்செட்டுகளை அகற்றுமாறு மாவட்டம் நிர்வாகம் உத்தரவிட்டது.
 அதன்பேரில், மாயாற்றுப் படுகையில் விவசாயத்துக்காக மின்மோட்டார் வைத்து நீரை இறைக்கும் மீனவர்கள் பம்ப்செட்டை அகற்றுமாறு பொதுப் பணித் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதற்கு மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
 இதையடுத்து, பவானிசாகர் பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் 100-க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் மாயாற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனர். அங்கு சட்டவிரோதமாக நீர் இறைக்கும் மின் பம்ப்செட்டுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தற்போது உள்ள விவசாயப் பயிர்களை அப்புறப்படுத்துமாறு மீனவர்களை கேட்டுக்கொண்டனர்.
 அப்போது அங்கு வந்த மீனவர்கள், அறுவடை முடியும் தருவாயில் உள்ள பயிர்களை விட்டுவிடுமாறும், வரும் மாததத்தில் அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்து வெளியேறுவதாகவும் உறுதி அளித்தனர்.  இதையடுத்து, பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கும், மீனவர்களுக்கு இடையே நிலவிய பிரச்னை முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com