பெரிய மாரியம்மன் கோயிலில் நாளை குண்டம்

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோயில்களான பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், நடுமாரியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெறவுள்ளது.

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோயில்களான பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், நடுமாரியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெறவுள்ளது.

இக்கோயில் குண்டம் திருவிழா மார்ச் 14-ஆம் தேதி இரவு பூச்சாட்டுடன் தொடங்கியது. மார்ச் 18-ஆம் தேதி இரவு முக்கிய நிகழ்வான கம்பம் நடும் விழா நடைபெற்றது. பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், நடுமாரியம்மன் கோயில்களில் கம்பங்கள் நடப்பட்டதையடுத்து பக்தர்கள் தினந்தோறும் கம்பத்துக்குப் புனிதநீர் ஊற்றியும், உப்பு, மிளகு போன்றவற்றை போட்டும் கம்பத்தை வழிபட்டு வருகின்றனர்.

கடந்த 2 நாள்கள் விடுமுறை தினமாக இருந்ததால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்துக்குப் புனிதநீர் ஊற்றி வழிபட்டனர். இதுதவிர சுமை தூக்குவோர் சங்கம், மடி தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் சார்பிலும், இடையங்காட்டுவலசு, நேரு நகர் வீதி, பாப்பாத்திக்காடு போன்ற பல்வேறு பகுதி மக்கள் சார்பிலும் தினமும் அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும், வானவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக காரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 28) அதிகாலையில் பக்தர்கள் குண்டம் இறங்கி பூ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதற்காக திங்கள்கிழமை இரவு முதல் டன் கணக்கில் விறகுகளை விடிய, விடிய எரித்து அதிகாலையில் பக்தர்கள் குண்டம் இறங்கும் வகையில் குண்டம் தயார் செய்யப்படும்.

இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு மாவிளக்கு, கரகம் எடுத்து வர பெரிய மாரியம்மன் விஷேச அலங்காரத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். மார்ச் 29-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பொங்கல் விழாவும், சின்னமாரியம்மன் கோயிலில் இருந்து தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.  மாலை 4 மணிக்கு மீண்டும் தேர்வடம் பிடித்தலும் நடைபெறும்.

மார்ச் 30-ஆம் தேதி மாலை மீண்டும் தேர்வடம் பிடித்து இழுத்து வர இரவு 9 மணியளவில் பெரிய மாரியம்மன் மலர் பல்லக்கில் திருவீதி உலா வருதலும் நடைபெறும். 31-ஆம் தேதி மாலை 4 மணிக்கு சின்னமாரியம்மன் கோயிலில் தேர் நிலை சேரும் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு சின்ன மாரியம்மன் மலர் பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

முன்னதாக இரவு 9.30 மணியளவில் காரைவாய்க்கால் மாரியம்மன் மலர் பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். ஏப்ரல் 1-ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், இதைத்தொடர்ந்து 3 கம்பங்களும் பக்தர்கள் புடைசூழ திருவீதி உலா வந்து காரைவாய்க்காலில் விடும் நிகழ்ச்சியும் நடைபெறும். ஏப்ரல் 2-ஆம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com