வட்டார வளர்ச்சி அலுவலரைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

மொடக்குறிச்சி தாலுகா, சாவடிப்பாளையம்புதூரில் உள்ள குடிநீர் இணைப்பைத் துண்டித்த வட்டார வளர்ச்சி அலுவலரைக் கண்டித்து

மொடக்குறிச்சி தாலுகா, சாவடிப்பாளையம்புதூரில் உள்ள குடிநீர் இணைப்பைத் துண்டித்த வட்டார வளர்ச்சி அலுவலரைக் கண்டித்து குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் பொதுமக்கள், பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
 ஆர்ப்பாட்டத்துக்கு, பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் பொ.வை.ஆறுமுகம் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.நல்லசிவம் வரவேற்றார். கிழக்கு மாவட்டச் செயலாளர் மு.முத்துகுமார், மாநில துணைத் தலைவர்கள்  என்.ஆர்.வடிவேல், எஸ்.எல்.பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாமக மாநில துணைத் தலைவர் என்.ஆர்.வடிவேல் கோரிக்கைகள் குறித்துப் பேசினார்.  
 ஆர்ப்பாட்டத்தில், சாவடிப்பாளையம்புதூர் பகுதியில் முறையற்ற குடிநீர் இணைப்புகள் அதிக அளவில் உள்ளதாகக் கூறி பிப்ரவரி மாதம் 1,500 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு, குடிநீர்த் தொட்டியின்கீழ் மட்டும் 10 குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன. இதனால், இப்பகுதி மக்கள் 2 கிலோ மீட்டர் சுற்றி வந்து தண்ணீர் பிடிக்க வேண்டியுள்ளது.  
 மொடக்குறிச்சி தாலுகாவில் உள்ள பெரும்பகுதி ஆழ்குழாய் மின்மோட்டார்கள் பழுதாகி உள்ளன. இதனால், ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் இருந்தும் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  
 எந்தவொரு காரணமுமின்றி துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை உடனடியாக திரும்ப வழங்க வேண்டும். ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
 இதில், பாமக ஒன்றியச் செயலாளர் சண்முகசுந்தரம், மாவட்ட துணைச் செயலாளர் கே.என்.ராஜு, முன்னாள் ஒன்றியச் செயலாளர் குப்புசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com