மதகை உடைத்து அணைக்கட்டு நீர் வெளியேற்றம்: சூரம்பட்டி மக்கள் அதிருப்தி

மதகை உடைத்து அணைக்கட்டு நீரை பொதுப் பணித் துறை அதிகாரிகள் வெளியேற்றியதால் சூரம்பட்டி சுற்று வட்டாரப் பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மதகை உடைத்து அணைக்கட்டு நீரை பொதுப் பணித் துறை அதிகாரிகள் வெளியேற்றியதால் சூரம்பட்டி சுற்று வட்டாரப் பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கீழ்பவானி வாய்க்காலில் இருந்து வெளியேறும் கசிவுநீரை சேமித்து அதன் மூலமாக பாசனம் பெறும் வகையில் கடந்த 1964-ஆம் ஆண்டு ஈரோடு, சூரம்பட்டி அணைக்கட்டு கட்டப்பட்டது. 12 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த அணைக்கட்டில் 0.5 டிஎம்சி., தண்ணீரை சேமித்து வைத்து அங்கிருந்து நஞ்சை ஊத்துக்குளி ஊற்றுக் கால்வாய் மூலம் 2 ஆயிரத்து 500 ஏக்கர் பாசன நிலங்கள் பாசனம் பெறும் வகையில் வாய்க்கால் வெட்டப்பட்டது.
காலப்போக்கில் நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலின் இருபுறமும் வீடுகள் கட்டப்பட்டு, அப்பகுதியில் குப்பை கொட்டப்பட்டதால் வாய்க்கால் தூர்ந்துபோய் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கடைசியாக கடந்த 2005-ஆம் ஆண்டு வரையிலும் சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் அதன்பிறகு முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. வாய்க்காலைப் போலவே சூரம்பட்டி அணைக்கட்டும், கட்டி முடிக்கப்பட்டு 52 ஆண்டுகளாகியும் தூர்வாரப்படாததால் தூர்ந்துபோய் தண்ணீரை அதிக அளவில் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனிடையே 12 ஏக்கர் பரப்பளவில் இருந்த சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியையொட்டி 200-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி ஆக்கிரமிக்கப்பட்டதால் அணைக்கட்டின் நீர்ப்பிடிப்பு பரப்பும் சுருங்கிப்போனது. இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்ரமிப்பு வீடுகளை அகற்றி அணைக்கட்டின் நீர்ப்பிடிப்புப் பகுதி மீட்கப்பட்டது.  
அதன்பின்னர், அணையைத் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஈரோடை தன்னார்வ அமைப்பு சூரம்பட்டி அணைக்கட்டில் தூர்வாரும் பணியை மேற்கொள்ள முன்வந்தது. இதற்காக ரூ. 18 லட்சம் ஒதுக்கி பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், கூடுதலாகப் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டதால் ரூ. 30 லட்சம் வரை செலவிடப்பட்டு தூர்வாரப்பட்டது.
இதற்கு கைமேல் பலனாக மழை பெய்யும்போது, அணைக்கட்டில் தண்ணீர்த் தேங்க தொடங்கியது. கடந்த சில தினங்களாக ஈரோடு பகுதியில் பலத்த மழை பெய்வதால் அணைக்கட்டு நிரம்பி, ஓடையில் வழியும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில், அணைக்கட்டையொட்டி உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் செல்ல சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், இக்கழிவுநீரை குழாய்கள் மூலம் கொண்டு வந்து அணைக்கட்டில் விடும் வகையில் 2 குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழாய்களின் மட்டம் வரை தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது. அணைக்கு கூடுதலாக தண்ணீர் வரத்து ஏற்படுமானால், சாக்கடை கழிவுகள் வெளியேற அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் அணைத் தண்ணீர்  குடியிருப்புகளுக்குள் புகுந்து விடும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
 இதையடுத்து, அணையில் தேங்கியிருக்கும் தண்ணீரை ஓடையில் வெளியேற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, பொதுப் பணித் துறை பணியாளர்கள் அணைக்கட்டுக்கு வெள்ளிக்கிழமை வந்தனர். அணைக்கு அதிக அளவு தண்ணீர் வரும்போது, பாதுகாப்புக்காக தண்ணீரை வெளியேற்ற அமைக்கப்பட்ட ஷட்டரை உடைத்து தண்ணீரை வெளியேற்றினர். இதனால் விவசாயிகளும், சுற்றியுள்ள பகுதி மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து, விவசாயிகள், அணைக்கட்டை சுற்றியுள்ள பகுதி மக்கள் கூறியதாவது:  
சூரம்பட்டி அணைக்கட்டை பல லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரியதற்குப் பலனாக பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் அணைக்கட்டில் தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக அணை நிரம்பியுள்ளது. இதனால், சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
தற்போது அணை நிரம்பியுள்ள நிலையில், மேலும் தண்ணீர் வரத்து அதிகமானால் சாக்கடை கழிவுநீர் வெளியேற அணைக்கட்டில் அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம், அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடும் என்ற தவறான புகாரை தெரிவித்து வருகின்றனர்.
அவ்வாறு, அணைக்கு நீர்வரத்து அதிகமானால் அணையில் இருந்து தானாகவே தண்ணீர் வழிந்து ஓடையில் வெளியேறிவிடும். அதை மறைத்து தவறான தகவலைத் தெரிவித்ததால் அணைக்கட்டில் பொருத்தப்பட்டுள்ள மதகை உடைத்து தண்ணீரை வெளியேற்றுகின்றனர்.
குடியிருப்புகளின் சாக்கடைக் கழிவுகள் வெளியேற வசதிகள் ஏற்படுத்துவதை விடுத்து, விவசாயிகளுக்கும், மக்களுக்கும் பயன்கொடுக்கும் அணைக்கட்டை உடைத்து தண்ணீரை வெளியேற்றுவது ஏன்?. உடைக்கப்பட்ட மதகை மீண்டும் சீரமைக்க பல நாள்களாவது ஆகும். அதுவரை அணையில் தண்ணீர் தேங்காமல் தொடர்ந்து ஓடையில் வெளியேறி வீணாகும். இதனால், யாருக்கும் பயனும் இல்லை.
எனவே, இப்பிரச்னைக்குத் தீர்வு காண மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com