கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் முன்பு போராட்டம்: தமாகா மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா அறிவிப்பு

அரசு அறிவித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமாகா இளைஞர் அணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா அறிவித்துள்ளார்.

அரசு அறிவித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமாகா இளைஞர் அணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா அறிவித்துள்ளார்.
 ஈரோடு தெற்கு மாவட்ட தமாகா அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
 தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தியும் கல்வித் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். எனவே, தமாகா சார்பில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் தொடர்பாக 85081-83565 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு புகார் செய்யலாம். ஒரே நேரத்தில் 5 பேர் அழைத்தாலும் இந்த எண்ணில் பேசும் அளவுக்கு தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டுள்ளது.
 பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம், கல்வி அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் நேரடியாக முறையிடுவோம். அப்போது, தீர்வு காணப்படாவிடில் சம்பந்தப்பட்ட பள்ளிகள் முன்பு ஜனநாயக ரீதியான போராட்டத்தில் ஈடுபடுவோம்.
 அதேபோல, கல்விக் கடன் கொடுக்காத வங்கிகள் தொடர்பாகவும் கல்லூரி மாணவ, மாணவிகள் புகார் செய்யலாம். உரிய ஆவணங்களுடன் வங்கிகளைத் தொடர்பு கொள்வோம். கல்விக் கடன் வழங்க மறுக்கும் வங்கிகள் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.
 தமிழக அரசால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் குடும்ப அட்டையில் உள்ள பிழைகளை உடனடியாக திருத்தம் செய்து வழங்க வேண்டும். அதுவரை பழைய குடும்ப அட்டைகளை காண்பித்து பொருள்கள் வாங்க அனுமதிக்க வேண்டும்.
 உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கும் இடங்களில் போராடும் பொதுமக்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வதையும், குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய முயற்சி செய்வதையும் காவல் துறை கைவிட வேண்டும்.
 தனியார் பாலின் தரம் குறித்து மாநில அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேரடியாக குற்றஞ்சாட்டியுள்ளார். எந்த நிறுவனத்தின் பாலில் தரம் குறைவாக இருப்பது என்பது குறித்து அவர் ஆதாரங்களுடன் விளக்க வேண்டும். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  செங்கோட்டையன் தவிர பிற அமைச்சர்கள் மந்த நிலையில்தான் செயல்பட்டு வருகின்றனர்.
 அரசியலுக்கு ரஜினி மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பின்னர் தமிழக இளைஞர்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. யார் அரசியலுக்கு வந்தாலும், அதற்கு முன்பு சமுதாயத்துக்காக அவர் என்ன செய்துள்ளார் என்பதை இளைஞர்கள் கூர்ந்து கவனித்துதான் ஆதரவு தருவார்கள்.
 1996-இல் இருந்ததுபோல 2017-இல் ரஜினிக்கு வரவேற்பு இருக்காது என்பது உண்மை. நேர்மை, எளிமை, தூய்மையான அரசியல்வாதிகளைத்தான் இளைஞர்கள் விரும்புகின்றனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com