வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அரசு அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அரசு அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
 வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
 ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் பேரிடர் தொடர்பாக விவரங்களை நாள்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்களான 1077, 0424-2260211, குறுந்தகவல் எண் 78069-17007 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தவறாமல் தகவல் தெரிவிக்க அனைத்துத் துறை அலுவலர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் தங்கள் எல்லைக்கு உள்பட்ட அனைத்துத் துறை அலுவலர்களைக் கொண்டு எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து உடனடியாக கூட்டம் ஏற்பாடு செய்து நடத்த வேண்டும்.
 வருவாய்த் துறை, பொதுப் பணித் துறை, மின்சார வாரியம், வளர்ச்சித் துறை அலுவலர்கள்  வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் பேரிடர்களை உடனுக்குடன் மாவட்ட ஆட்சியர், சார்பு துறைகளுக்குத் தெரிவிக்கும் வகையில் இரவில் சுழற்சி முறையில் பணிபுரிய பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.
 வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கள் பகுதியில் சென்ற ஆண்டுகளில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து அந்த இடங்களில் பேரிடர் மேலாண்மை நடவடிக்கை மேற்கொள்ள முன்னேற்பாட்டு பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.
 மேலும், அப்பகுதிகளில் பொதுமக்களைத் தங்க வைக்க திருமண மண்டபங்கள், பள்ளிகள்,  நுகர்வோர் பாதுகாப்புக் குழு, சமுதாய நல அமைப்புகள், பிற பொது நல அமைப்புகள் குறித்த விவரங்களை தங்கள் அலுவலகத்தில் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
 அனைத்து அலுவலர்களும் தங்கள் பகுதிகளுக்கு உள்ட பல்வேறு துறை அலுவலர்களின் தொடர்பு எண்கள், வட்டத்தில் பொக்லைன் இயந்திரம், கன ரக வாகனங்கள், தேவையான மீட்புப் பணி உபகரணங்களை வைத்துள்ளவர்களின் பட்டியலை தொலைபேசி எண்ணுடன் வட்டாட்சியர்கள் தொகுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சுகாதாரத் துறையினர் வடகிழக்குப் பருவ மழைக்கு அத்தியாவசிய மருந்துகள் தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். அவசர கால ஊர்திகள், மருத்துவ வாகனங்கள், ஜெனரேட்டர் நல்ல நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றார்.
 இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  பெ.மேனகா உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com