அந்தியூரில் போலி மருத்துவர்கள் இருவர் கைது

அந்தியூர் அருகே மருத்துவக் கல்வி பெறாமல் ஆங்கில மருத்துவம் பார்த்த மருந்துக் கடை உரிமையாளர் உள்பட இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

அந்தியூர் அருகே மருத்துவக் கல்வி பெறாமல் ஆங்கில மருத்துவம் பார்த்த மருந்துக் கடை உரிமையாளர் உள்பட இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் கனகாசலகுமார் தலைமையில், சின்னத்தம்பிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சக்திகிருஷ்ணன், அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் மோகனவள்ளி ஆகியோர் கொண்ட குழுவினர் அந்தியூர், அத்தாணி உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அந்தியூர் - சத்தி சாலை, முனியப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் சரவணன் (36). இவரது மருந்துக் கடையில் நடத்தப்பட்ட சோதனையின்போது, மருந்துக் கடையின் பின்புறத்தில் ஒரு பெண்ணுக்கு குளுக்கோஸ் இறக்கி வந்தது தெரியவந்தது. விசாரணையில் 10-ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு சரவணன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கல்வியறிவு குறைந்த செங்கல் சூளைத் தொழிலாளர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சை அளித்தது தெரியவந்தது.
இதையடுத்து, இதுகுறித்த புகாரின்பேரில் அந்தியூர் போலீஸார் சரவணனைக் கைது செய்தனர்.  ஆங்கில மருத்துவம் பார்க்க பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்று, அத்தாணியை அடுத்த கீழ்வாணியில் சீனிவாசன் (65) என்பவர், ஹோமியோபதி படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாகக் கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டது.
ஆங்கில மருத்துவம் பார்த்தது உறுதியானதைத் தொடர்ந்து ஆப்பக்கூடல் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் சீனிவாசனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com