ஈரோடு மாவட்டத்தில் அரசு சார்பில் நவீன அரிசி ஆலை அமைக்கப்படுமா?பீ.ஜெபலின் ஜான்

ஈரோடு மாவட்டத்தில் அரசு சார்பில் நவீன அரிசி அரைவை ஆலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் அரசு சார்பில் நவீன அரிசி அரைவை ஆலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக நெல் சாகுபடி அதிக அளவில் நடைபெறுவது ஈரோடு மாவட்டத்தில்தான். 2014-ஆம் ஆண்டு வரையிலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடிவேரி, காலிங்கராயன், கீழ்பவானி பாசனத்துக்காக பவானிசாகர் அணையில் இருந்து ஓரளவு தட்டுப்பாடின்றி தண்ணீர் திறக்கப்பட்டதால் நெல் பாசனம் சீராக இருந்தது.
இதன் காரணமாக, கொடிவேரி பாசனத்துக்கு உள்பட்ட தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் பாசனப் பகுதிகளில் குறுவை சீசனிலும், கீழ்பவானி பாசனப் பகுதியில் சம்பா சீசனிலும் நெல் சாகுபடி செய்யப்படும்.
கோ-43, கோ-34, ஐஆர்-20, இட்லி குண்டு அரிசி ரகங்களும், பவானி, மாப்பிள்ளை சம்பா போன்ற நாட்டு ரக நெல்லும், பொன்னி, கர்நாடக பொன்னி உள்ளிட்ட ரகங்களும் விளைவிக்கப்படும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 2014-ஆம் ஆண்டு மட்டும் மாவட்டம் முழுவதும் அதிகபட்சமாக 33 நெல் கொள்முதல் மையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
2014-ஆம் ஆண்டு குறுவை சீசனில் மட்டும் மாவட்டம் முழுவதும் 30 ஆயிரம் டன்னும், சம்பா சீசனில் 60 ஆயிரம் டன் என ஒரே ஆண்டில் 90 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக நெல் கொள்முதல் கடும் வீழ்ச்சியடைந்துவிட்டது. 2015-ஆம் ஆண்டில் இதில் பாதி அளவுக்கு கூட கொள்முதல் ஆகவில்லை.
2016-ஆம் ஆண்டிலும் கடும் வறட்சி நிலவியதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வறண்டுபோய் மாவட்டத்தில் காலிங்கராயன், கொடிவேரி, கீழ்பவானி ஆகிய 3 பாசனப் பகுதிக்கும் தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், இந்த 2016-17 ஆம் ஆண்டுக்கான சீசனில் ஒரு கிலோ நெல்கூட மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படவில்லை.
இதுகுறித்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி சீசனில் பெய்யும் மழையைக் கொண்டும், அணையில் இருந்து திறக்கும் பாசன நீரைக் கொண்டும் விவசாயிகள் விளைவித்த, 1 லட்சம் டன் வரையிலும் அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.
2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியால் நெல் கொள்முதல் வெகுவாக குறைந்துவிட்டது. 2016-ஆம் ஆண்டில் கொடிவேரி பாசனத்துக்கு ஒன்றரை மாதமும், காலிங்கராயன் பாசனத்துக்கு 1 மாதமும் மட்டுமே தண்ணீர் விட்டதால் நெல் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதனால், கடந்த ஆண்டு மாவட்டத்தில் ஓர் இடத்தில் கூட நெல் கொள்முதல் மையம் திறக்கப்படவில்லை. இதனால், ஒரு கிலோ நெல் கூட கொள்முதல் செய்ய முடியாமல் போனது.
இந்த ஆண்டில் சம்பா சாகுபடி சீசன் தவறியே 3 பாசனப் பகுதிகளிலும் நெல் சாகுபடியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டு கூடுதல் நெல் கொள்முதல் செய்ய வாய்ப்புகள் உள்ளன என்றனர்.
தஞ்சாவூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் ஆகும் நெல்லை அரைவை செய்ய அரசு சார்பில் 3 நவீன அரிசி ஆலைகள் இயங்கி வருன்றன. ஆனால், ஈரோடு மாவட்டத்தில் ஒரு அரிசி அரைவை ஆலை கூட அரசு சார்பில் அமைக்கப்படவில்லை.
தனியார் அல்லது அரசு அரைவை ஆலைக்கு கொண்டு சென்றே அரைவை செய்யப்படுகிறது. எனவே, ஈரோடு மாவட்டத்திலும் அரசு சார்பில் ஒரு நவீன அரிசி ஆலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, கீழ்பவானி முறைநீர்ப் பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் பி.காசியண்ண கவுண்டரிடம் கேட்டபோது, ஈரோடு மாவட்டத்தைப் பொருத்தவரை 1.5 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக வறட்சி காரணமாக நெல் அறுவடை குறைந்துவிட்டது. இருப்பினும் வரும் காலங்களில் நெல் அறுவடை அதிகரிக்கும். இங்குள்ள 1.5 லட்சம் ஏக்கரில் நெல் பயரிட்டால் குறைந்தபட்சம் 1 லட்சம் டன் நெல் அரசு கொள்முதல் மையம் மூலம் கொள்முதல் செய்யப்படும்.
எனவே, ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி நகரில் 2 நவீன அரிசி ஆலைகளை அரசு சார்பில் அமைக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com