தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களை நாமக்கல் வழியாக மாற்றுவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு

ஈரோடு வழியாக தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் நாமக்கல் வழியாக மாற்றி இயக்கப்படும் என்ற அறிவிப்புக்கு காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

ஈரோடு வழியாக தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் நாமக்கல் வழியாக மாற்றி இயக்கப்படும் என்ற அறிவிப்புக்கு காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
வாரந்தோறும் புதன்கிழமை குஜராத் மாநிலம், ஓகாவில் இருந்து புறப்பட்டு காட்பாடி, சேலம்,  ஈரோடு, கரூர், மதுரை வழியாக ராமேஸ்வரம் வரை ராமேஸ்வரம் விரைவு ரயில் இயக்கப்படுகிறது.
மறு மார்க்கத்தில் வெள்ளிக்கிழமை இரவு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு மதுரை, கரூர், ஈரோடு, சேலம், காட்பாடி வழியாக ஓகா வரையிலும் ஓகா விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் 2018 மார்ச் மாதத்தில் இருந்து ஈரோடு வராமல் கரூர், நாமக்கல், சேலம் வழியாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
 இதேபோல, வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று சென்னையில் இருந்து புறப்பட்டு காட்பாடி,  சேலம், ஈரோடு,  திருச்சி,  மதுரை,  திருநெல்வேலி வழியாக நாகர்கோயிலுக்கு சனிக்கிழமை சென்று சேரும் வகையில் வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது.
மறு மார்க்கத்தில் ஞாயிறு இரவு புறப்பட்டு மதுரை,  கரூர்,  ஈரோடு, சேலம், வழியாக சென்னைக்கு இயக்கப்படுகிறது. 
இந்த ரயில் ஈரோடு வழியாக இயக்குவதால் கோவை,  திருப்பூர்,  நீலகிரி,  ஈரோடு மாவட்டங்களில் வசித்து வரும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.
தற்போது இந்த ரயிலையும் கரூர்,  நாமக்கல்,  சேலம் வழியாக மாற்றி இயக்க முடிவு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 
தொடர்ந்து, ஈரோடு வழியாக இயக்கும் ரயில்களை வேறு வழியில் இயக்குவதன் மூலம் ஈரோடு, கோவை,  திருப்பூர்,  நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்படுவர். எனவே, நாமக்கல் வழியாக இந்த ரயில்களை மாற்றி இயக்க எக்காரணம் கொண்டும் முயற்சிக்கக் கூடாது என ஈரோடு மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினரும், காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் கே.என். பாஷா கூறியதாவது: 
நாமக்கல் ரயில் நிலையம் உருவாக்கியதால் இதுவரை சேலம்,  ஈரோடு,  கரூர் வழியாக தென் மாவட்டங்களுக்கும்,  திருச்சி,  தஞ்சாவூர், மயிலாடுதுறை,  கும்பகோணம் போன்ற மத்திய மாவட்ட பகுதிகளுக்கும் இயக்கப்பட்ட ரயில்களை ஈரோடு வழியாக இயக்கவிடாமல் தென்னக ரயில்வே நிர்வாகம் சதி செய்கிறது.
காலம்காலமாக ஈரோடு வழியாக இயக்கப்படும் ரயில்களை மாற்றுப் பாதையில் இயக்க முயற்சிக்கக் கூடாது. இதை வலியுறுத்தி ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு ஈரோடு மாவட்ட ரயில் பயணிகள் சார்பில் கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சேலம் கோட்டத்திலேயே அதிக வருவாய் ஈட்டித் தரும் ரயில் நிலையங்களில் ஈரோடு முன்னணியில் உள்ளது. அப்படி இருக்கும்போது ஈரோடு வழியே ரயில்கள் இயக்குவதைத் தடுக்கும் வகையில் இதுபோன்ற அறிவிப்புகளை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 
இந்த அறிவிப்பை உடனடியாக தென்னக ரயில்வே நிர்வாகம் திரும்பப் பெற வேண்டும்.  இல்லாவிட்டால் கட்சித் தலைமையின் அனுமதி பெற்று காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு சார்பில் மாவட்டத் தலைவர் ஜெ.சுரேஷ் தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com