ஈரோடு மாவட்டத்தில் பலத்த மழை: ஏரிகள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது.

ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் புதன்கிழமை பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பகல் நேரத்தில் மழை இல்லாத நிலையில், இரவு நேரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. பெரும்பாலான பகுதிகளில் விடிய, விடிய மழை பெய்தது. ஈரோடு மாநகரப் பகுதிகளில் இரவு பெய்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சாக்கடை கால்வாய்கள் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலைகளில் வெள்ளம் ஓடியது. ஈரோடு மணிக்கூண்டு,  மேட்டூர் சாலை, முனிசிபல்காலனி, பன்னீர்செல்வம் பூங்கா, சூரம்பட்டி நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு, காமராஜர் வீதியில் கடைகளில் தண்ணீர் புகுந்தது. உடனடியாக பொதுமக்களே தண்ணீரை வெளியேற்றினர்.
புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்): ஈரோடு 97, பவானி 87.4, ஓலப்பாளையம் 85, கவுந்தப்பாடி 49,  எலந்தகுட்டைமேடு 36, கோபி 18, கொடிவேரி 12.2, பெருந்துறை 12, புங்கம்பாடி 7, பவானிசாகர் 3, சத்தி 6, மொடக்குறிச்சி 2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதில், அதிகபட்சமாக ஈரோட்டில் மழை பெய்துள்ளது.  ஈரோட்டில் விடிய, விடிய மழை பெய்த நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு 1 முதல் அதிகாலை 3.30 மணி வரை மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
பவானியில்...
பவானி, அந்தியூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு இடி, மின்னலுடன் விடிய விடிய பெய்த பலத்த மழையால் ஏரிகள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயில் அடித்து வந்த நிலையில், புதன்கிழமை இரவு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு குளிர்காற்றும் வீசத் தொடங்கியது. சுமார் 11 மணியளவில் திடீரென பலத்த இடி, மின்னலுடன் பெய்யத் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது.  பலத்த காற்றால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து, பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. பரவலாக பவானி, அந்தியூர் பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பர்கூர் மலைப் பகுதியில் பெய்த மழையால் அந்தியூர், வரட்டுப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பவானியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தை வெள்ளநீர் சூழ்ந்து நின்றது. விவசாய நிலங்களிலிருந்து வெளியேறிய மழைநீரால் பவானி - மேட்டூர் சாலையில் குருப்பநாயக்கன்பாளையம், ஜீவா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் மேட்டூர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
பவானி அருகே வளையக்காரபாளையம் ஏரிக்கு மழைநீர் பெருக்கெடுத்து வந்ததில் ஏரிக் கரைகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாபேட்டை பகுதியில் பெய்த மழையால் பாலமலையைச் சுற்றியுள்ள சிறிய குட்டைகள், பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிச்சி அருகே கல்பாவியில் விவசாய நிலத்தில் இடி விழுந்ததால் தண்ணீர் கொப்பளித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com